கூட்டாட்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் தமிழக அரசு செயல்படவில்லை


கூட்டாட்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் தமிழக அரசு செயல்படவில்லை
x
தினத்தந்தி 24 Sep 2022 5:30 AM GMT (Updated: 24 Sep 2022 5:31 AM GMT)

கூட்டாட்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் தமிழக அரசு செயல்படவில்லை என பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டினார்.

சிவகங்கை

காரைக்குடி,

கூட்டாட்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் தமிழக அரசு செயல்படவில்லை என பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டினார்.

புண்ணிய பூமி

பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காரைக்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த புண்ணிய பூமிக்கு வந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் பல்வேறு கட்சியிலிருந்து பலர் பா.ஜனதாவில் இணைந்துள்ளனர். இதற்கு நமது பிரதமர் மோடியின் சிறப்பான திட்டங்களும், நிர்வாக திறமையுமே காரணம்.

தமிழகம் பிரதமரின் இதயத்தில் இடம்பெற்றுள்ள மாநிலமாகும். மோடி கூட்டாட்சி முறையின் வழிமுறைகளை மிகவும் நம்புகிறார். தமிழக அரசு கூட்டாட்சி முறைக்கு ஒத்துழைப்பு என்ற அடிப்படையில் செயல்படவில்லை. அவர்கள் பழி சுமத்தும் செயலை நம்புகிறார்கள்.

மின்கட்டணம் உயர்வு

தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துள்ளது. மின்சாரம் கட்டணம் உயர்ந்துள்ளது. அதைப்பற்றி தி.மு.க. கவலைப்படவே இல்லை. விலைவாசி உயர்வுக்கு காரணம் யார்? என்பதை மக்கள் அறிவார்கள். எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறுவதையே தி.மு.க. வழக்கமாக கொண்டுள்ளது,

தமிழக மக்களை தவறான பாதைக்கு தி.மு.க.வினர் திசை திருப்புகின்றனர். நாங்கள் நாட்டின் வளர்ச்சியில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

தி.மு.க. வாரிசு அரசியலை மட்டும் செய்கிறது. இவர்களது மொத்த கலாசாரமும் குடும்ப அரசியலை மையப்படுத்தியே உள்ளது.

சிவகங்கை பல ஆண்டுகளாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ள பகுதி. ஆனால் இது மிகவும் பின்தங்கி உள்ளது. இதுவரை என்ன செய்தார்கள். மக்கள் மீது உள்ள அன்பின் காரணமாக தமிழகத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். எய்ம்ஸ் தொடர்பான சில வீடியோக்களை பார்த்தேன். அது பற்றிய முழுமையான கருத்துக்களை அண்ணாமலை பிறகு தெரிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story