பறிமுதல் செய்த 350 கிலோ சுறா துடுப்புகளை ஆய்வகத்திற்கு அனுப்ப நீதிபதி உத்தரவு


பறிமுதல் செய்த 350 கிலோ சுறா துடுப்புகளை ஆய்வகத்திற்கு அனுப்ப நீதிபதி உத்தரவு
x
தினத்தந்தி 13 May 2023 12:15 AM IST (Updated: 13 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 350 கிலோ சுறா துடுப்புகளை தடைசெய்யப்பட்ட வகைதானா என கண்டறிய சென்னை வனவிலங்கு பாதுகாப்பு ஆய்வகத்திற்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம்


ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 350 கிலோ சுறா துடுப்புகளை தடைசெய்யப்பட்ட வகைதானா என கண்டறிய சென்னை வனவிலங்கு பாதுகாப்பு ஆய்வகத்திற்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சுறா துடுப்புகள்

சென்னையில் இருந்து ராமநாதபுரம் வந்த ரெயிலில் தடைசெய்யப்பட்ட கடல்வாழ் உயிரின பாகங்கள் கடத்தி கொண்டு செல்லப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று ரெயிலில் இருந்து இறக்கி மூடைகளை சரக்கு வாகனத்தில் ஏற்றி கொண்டிருந்தவர்களை மடக்கி பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த மூடைகளை பிரித்து சோதனையிட்டபோது அதில் சுறா பீலிகள் எனப்படும் சுறா துடுப்புகள் பதப்படுத்தப்பட்டு இருந்தது. 350 கிலோ சுறா துடுப்புகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் வேதாளை பகுதியை சேர்ந்தவரையும், வாகன டிரைவர் தாதனேந்தல் பகுதியை சேர்ந்தவரையும் பிடித்து வந்தனர்.

இவர்கள் வைத்திருந்த சுறா துடுப்புகளுடன் வழக்குப்பதிவு செய்து ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படி கைப்பற்றப்பட்ட சுறா துடுப்புகளை சென்னை வனவிலங்குகள் ஆய்வகத்திற்கு விரிவான ஆய்வுக்கு அனுப்பி தடைசெய்யப்பட்ட வகைதானா என உறுதி செய்ய உத்தரவிட்டார்.

அனுப்ப உத்தரவு

மேலும், அதுவரை இருவரும் தினமும் காலை, மாலை வேலைகளில் ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து கோர்ட்டில் இருந்து சுறா துடுப்புகள் மாதிரி பெறப்பட்டு சென்னையில் வண்டலூரில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பிற்கான மேம்படுத்தப்பட்ட ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி உள்ளனர்.

இந்த ஆய்வகத்தில் மேற்கண்ட கடல்சுறா துடுப்புகள் தடைசெய்யப்பட்ட வகைதானா என ஆய்வு செய்து ஒரு வாரத்திற்குள் முடிவு வந்துவிடும் என கூறப்படுகிறது. முடிவு வந்ததும் அதன் அடிப்படையில் அபராதம் விதிப்பு அல்லது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story