கோபி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு 7 ஆண்டு ஜெயில்- ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


கோபி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு 7 ஆண்டு ஜெயில்- ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x

கோபி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை அளித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

ஈரோடு

ஈரோடு

கோபி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை அளித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

சிறுமிக்கு தொல்லை

ஈரோடு மாவட்டம் கோபி நாகதேவன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டையன் என்கிற அப்புரு (வயது 59). இவர் கடந்த 29-3-2022 அன்று கருக்கம்பள்ளி பகுதியில் அவருக்கு தெரிந்த ஒருவரின் வாகன பழுதுநீக்கும் நிலையத்துக்கு சென்றார். அப்போது அங்கு 9 வயது சிறுமி ஒருவர் மட்டும் தனியாக இருந்தார். சிறுமியிடம் பேசிய செங்கோட்டையன், அவளது பெற்றோர் அருகில் இல்லை என்பதை தெரிந்து கொண்டு, பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்தில் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொண்டார். பயந்து போன சிறுமி அவரை விட்டு தப்பித்துச்செல்ல முயன்றார். அப்போது யாரோ வருவதுபோன்று நடமாட்டம் தெரிந்ததால் செங்கோட்டையன், சிறுமியை விட்டு விட்டு அங்கிருந்து வேகமாக தப்பித்துச்சென்று விட்டார்.

பின்னர் சிறுமியின் பெற்றோர் வந்தபோது, சிறுமி நடந்த சம்பவத்தை கூறினார். அதைத்தொடர்ந்து பெற்றோர் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

7 ஆண்டு ஜெயில்

போலீசார் இதுதொடர்பாக போக்சோ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும்) சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து செங்கோட்டையன் என்கிற அப்புருவை விசாரித்து கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

நீதிபதி ஆர்.மாலதி வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம்சாட்டப்பட்ட செங்கோட்டையன் என்கிற அப்புருவுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் அந்த தீர்ப்பில் கூறி இருந்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.2 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து, நீதிபதி ஆர்.மாலதி அந்த தீர்ப்பில் வலியுறுத்தி இருந்தார்.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் எம்.ஜெயந்தி ஆஜர் ஆனார்.


Next Story