வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு மின்வாரிய அதிகாரி-மனைவிக்கு 5 ஆண்டு ஜெயில்; ரூ.1 கோடி அபராதமும் விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு மின்வாரிய அதிகாரி-மனைவிக்கு 5 ஆண்டு ஜெயில்; ரூ.1 கோடி அபராதமும் விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு
x

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஈரோடு மின்வாரிய தலைமை பொறியாளருக்கும், அவரது மனைவிக்கும் தலா 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

ஈரோடு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஈரோடு மின்வாரிய தலைமை பொறியாளருக்கும், அவரது மனைவிக்கும் தலா 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

வழக்குப்பதிவு

ஈரோடு மின்சார வாரியத்தில் தலைமை பொறியாளராக கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை கே.ஜி.நடேசன் (வயது 67) பணியாற்றினார். அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரை தொடர்ந்து கடந்த 2008-ம் ஆண்டு ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இதில், நடேசன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருந்ததும், அவரது பெயரிலும், தனியார் கல்லூரி பேராசிரியையான அவரது மனைவி மல்லிகாவின் (65) பெயரிலும் ரூ.2 கோடியே 6 லட்சத்து 69 ஆயிரத்துக்கு சொத்து இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நடேசன், அவரது மனைவி மல்லிகா ஆகியோர் மீது ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

ரூ.1 கோடி அபராதம்

நடேசன், மல்லிகா ஆகியோர் மீது ஈரோடு மாவட்ட தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்து வந்த ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு சரவணன் நேற்று தீர்ப்பு அளித்தார். அதில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றத்துக்காக நடேசன், அதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி மல்லிகா ஆகியோருக்கு தலா 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், அவர்களுக்கு தலா ரூ.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1 கோடி அபராதம் விதித்தும் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு தீர்ப்பு கூறினார்.

தலைமை பொறியாளராக பணியாற்றிய நடேசன் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story