பாப்பிரெட்டிப்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்ட இடம் தேர்வு-ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
இடம் தேர்வு
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் சார்பு நீதிமன்றங்களும் உள்ளன. இவை அனைத்தும் தனியார் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகிறது. இந்த வாடகை கட்டிடங்களில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை.
இதுகுறித்து இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், வக்கீல்கள் அரசுக்கு சொந்தமான இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய நீதிமன்ற கட்டிடங்களை கட்ட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று பாப்பிரெட்டிப்பட்டி அருகே வெங்கடசமுத்திரத்தில் உள்ள அரசு புறம்போக்கு கரட்டு பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.
ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு
இந்தநிலையில் நீதிமன்றங்கள் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அந்த இடத்தில் நீதிமன்ற கட்டிடங்களை கட்ட மாவட்ட நிர்வாக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் பாப்பிரெட்டிப்பட்டியில் சார்பு நீதிமன்றம் தொடங்க உத்தரவிட்டனர்.
இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டியில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் நீதிமன்றங்களை நீதிபதிகள் பார்வையிட்டனர். அப்போது அந்த கட்டிடத்தில் போதிய வசதிகள் இல்லாததால், நீதிமன்றத்துக்கு வாடகைக்கு வேறு கட்டிடம் பார்க்க அதிகாரிகளை அறிவுறுத்தினர்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி, மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி கணேசன், பாப்பிரெட்டிப்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார், அரூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) ராஜசேகரன், அரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேசன், பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் சுப்பிரமணி, வக்கீல்கள் சங்க தலைவர் அருணகிரி, செயலாளர் கலைச்செல்வன், வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், கிராம நிர்வாக அலுவலர் நித்யா உள்பட பலர் உடன் இருந்தனர்.