கூடுதல் தண்ணீர் ெபற முல்லைப்பெரியாறு அணையில் 2-வது சுரங்கப்பாதை கோரிய வழக்கு தள்ளுபடி- "இருமாநில பிரச்சினையில் சுப்ரீம்கோர்ட்டுதான் தலையிட முடியும்" என நீதிபதிகள் கருத்து


கூடுதல் தண்ணீர் ெபற முல்லைப்பெரியாறு அணையில் 2-வது சுரங்கப்பாதை கோரிய வழக்கு தள்ளுபடி- இருமாநில பிரச்சினையில் சுப்ரீம்கோர்ட்டுதான் தலையிட முடியும் என நீதிபதிகள் கருத்து
x

கூடுதல் தண்ணீர் பெறும் வகையில் முல்லைப்பெரியாறு அணையில் 2-வது சுரங்கப்பாதை திட்டத்தை அமைக்கக்கோரிய வழக்கை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இருமாநில பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டுதான் தலையிட முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதுரை


கூடுதல் தண்ணீர் பெறும் வகையில் முல்லைப்பெரியாறு அணையில் 2-வது சுரங்கப்பாதை திட்டத்தை அமைக்கக்கோரிய வழக்கை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இருமாநில பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டுதான் தலையிட முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

முல்லைப்பெரியாறு அணை

மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்த சுந்தரராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "முல்லைப்பெரியாறு அணையில் நீர்ப்பிடிப்பு கொள்ளளவான 142 அடிக்கும் அதிகமான அளவில் சேரும் தண்ணீர், கேரள கடல் பகுதிக்கு திறக்கப்பட்டு வீணாகிறது. இதை தவிர்க்க, கூடுதலாக ஒரு சுரங்கப்பாதை அமைத்தால், உபரிநீரை வீணாக கேரள பகுதியில் வெளியேற்றாமல் தமிழகத்திற்கு பயன்படுத்தலாம். இதுதொடர்பான திட்டத்துக்கு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு அனுமதி தந்துள்ளது. அதன்படி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் பெறும் வகையில் 2-வது சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறையின் மூத்த என்ஜினீயர்கள் சங்கத்தின் சார்பில் விஜயகுமார், ரெங்கன் ஆகியோர் கடந்த 2011-ம் ஆண்டில், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

2012-ம் ஆண்டில் கனகசபாபதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் கேரள அரசியல்வாதிகள் வருகையை முறைப்படுத்தி, அணையை பாதுகாக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தடையாக இருக்கும் கேரள அரசு

இந்த வழக்குகள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருந்ததாவது:-

முல்லைப்பெரியாறு அணையானது ஏற்கனவே பலப்படுத்தப்பட்டு நவீன தரத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. அணையின் நீர் சேமிப்புதிறனை அதிகரிக்கவும், பற்றாக்குறை உள்ள வைகைப் படுகையில் நீரை சிறப்பாக நிர்வகிக்கவும், பயன்படுத்தவும், குடிநீர், விவசாயத் தேவை மற்றும் பிற துறை தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் கேரள அரசு ஒத்துழைக்க மறுத்து, தடையாக நிற்கிறது.

இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

இதை பதிவு செய்து கொண்ட ஐகோர்ட்டு, இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தது.

தள்ளுபடி

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் பிறப்பித்தனர்.

அதில், இருமாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகள், மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்குமான பிரச்சினைகளில் சுப்ரீம் கோர்ட்டு மட்டுமே தலையிட முடியும் என்று அரசியலமைப்புச்சட்டத்தின் 131-வது பிரிவு கூறியுள்ளது. அதன் அடிப்படையில் இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.


Related Tags :
Next Story