'ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவை விசாரிக்க வேண்டுமா?'நீதிபதி ஆறுமுகசாமி பதில்
‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் விசாரிக்க வேண்டுமா?’ என்பது குறித்து சேலம் மாவட்டம், கருமந்துறையில் நடந்த விழா ஒன்றில் நீதிபதி ஆறுமுகசாமி பதில் அளித்தார்.
பெத்தநாயக்கன்பாளையம்
ஜெயலலிதா மரணம்
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்று பேசினார்.
அப்போது அவரிடம் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்தது தொடர்பாக வக்கீல் தமிழ்மணி நேர்காணல் நடத்தினார். இதில் பங்கேற்ற நீதிபதி ஆறுமுகசாமி கூறியதாவது:-
ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கின் விசாரணை ஆணையராக விரும்பி தான் பொறுப்பு ஏற்றுக்கொண்டேன். சவாலாக கருதவில்லை. எனக்கு விடுபட்ட அதிகாரங்களை அரசிடம் எழுதி அனுப்பி பெற்றுக்கொண்டேன். சாதாரண அறிக்கை தான் கொடுப்பேன் என்று விசாரணை தொடங்கிய நிலையில் இந்தளவுக்கு முக்கியத்துவம் பெறும் என்று கருதவில்லை.
குற்றச்சாட்டுகள்
இந்த ஆணைய அறிக்கை தொடர்பாக மருத்துவமனை குற்றச்சாட்டுகள் பொய்யானது என்று கூறவில்லை. மெடிக்கல் போர்டு வைக்கலாம் என்று சொன்னதற்கு அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. எய்ம்ஸ் மருத்துவ குழுவின் கருத்துக்கு, மாறான கருத்தை எவ்வாறு கூற முடியும் என்பது சர்ச்சையாக உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர், நீங்கள் என்ன மருத்துவரா? என்று கேள்வி எழுப்பினார். கேள்வி எழுப்பியவர் மருத்துவர் அல்ல, மருத்துவ பட்டம் பெற்றவர் அல்ல, அவர் எவ்வாறு கருத்துக்களை முன்வைத்தாரோ? அதே அடிப்படையில் நானும் கருத்துக்களை முன்வைத்தேன்.
தீபா என்ன சொன்னார்?
ஜெயலலிதாவிற்கு இதயத்தில் கோளாறு என்றும், இதயத்தில் உள்ள இணைப்பு எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்றும் டாக்டர் மேத்யூ சாமுவேல் சாட்சியம் அளித்துள்ளார். ஆஞ்சியோ தேவையில்லை என்று சொன்னதற்கான சாட்சியம் இல்லை.
ஜெயன் பரமேஸ்வரர் என்ற டாக்டர், ஆஞ்சியோ தேவையில்லை என்று சொன்னார் என்பது குறித்து தெளிவில்லை. அதனால்தான் எய்ம்ஸ் மருத்துவமனை கொடுத்த அறிக்கை ஏற்புடையது அல்ல என்று தெரிவித்தோம்.
மேலும் பல்வேறு விவாதங்களில் ஆணைய அறிக்கையை முழுமையாக படிக்காமல் கருத்து கூறுகிறார்கள். அறிக்கை முழுவதும் படித்துவிட்டு கருத்து கூற வேண்டும். முழுமையாக படிக்காமல் கருத்து கூறுவது தவறு.
தீபாவிற்கு சம்மன் போட்டு ஆணைய சாட்சியாக விசாரித்தேன். பெருமளவு மனக்குறைகளை கூறினாரே தவிர வேறு ஒன்றும் கூறியது போன்று நினைவில்லை.
இவ்வாறு அவர் கூறினாா்.
சசிகலாவை விசாரிக்க வேண்டுமா?
சுகாதார துறை முன்னாள் அமைச்சர், சுகாதார செயலாளர், டாக்டர் ஆகிய 3 பேர் தவறிழைத்ததாக கருதி நடவடிக்கை இருக்க வேண்டும் என்று ஆணைய பரிந்துரை குறித்து நீதிபதி ஆறுமுகசாமி பதில் அளித்த போது, 'அறிக்கையில் சொன்னதற்கு பிறகு தீர்ப்புக்கு விளக்கம் சொல்வது நீதிபதிக்கு தர்மசங்கடமான செயல். அப்போது எந்த மனநிலையில் சொல்கிறேனோ அதுவே சரியானது. வழக்கு விசாரணை முடிந்த பிறகு உடனடியாக தீர்ப்பு வழங்கி விடுவேன். வழக்குகளை வீட்டில் எடுத்து சென்று ஆலோசிக்கமாட்டேன்' என்றார்.
மேலும் சசிகலா உள்பட சிலரை விசாரிக்க வேண்டும் என்று சொல்லி உள்ளீர்கள்? அது குறித்து கருத்து கூற விருப்பம் உள்ளதா? என்ற கேள்விக்கு, அதுகுறித்து கருத்து சொல்ல விருப்பமில்லை என்று நீதிபதி ஆறுமுகசாமி பதில் அளித்தார்.
-------------
'சி.பா.ஆதித்தனார் சிலையை தினமும் பராமரிப்பது பெருமைக்குரிய விஷயம்'
நீதிபதி ஆறுமுகசாமி பேச்சு
கருமந்துறையில் நடந்த விழாவில், நீதிபதி ஆறுமுகசாமி பேசும்போது, 'பல இடங்களில் சிலைகள் அமைந்துள்ளன. இருந்தபோதிலும் நான் பார்த்து தினமும் மகிழ்ந்த சிலை என்னவென்றால் சென்னையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மட்டுமே. ஏனென்றால் அந்த சிலையை தினந்தோறும் சுத்தப்படுத்தி மலர் மாலை அணிவித்து வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாகும். சி.பா.ஆதித்தனார் சிலையை முறையாக பராமரிப்பது பெருமைக்குரிய விஷயம் ஆகும்' என்றார்.