சணல் பாய் விரித்து நவீன தொழில்நுட்பத்தில் சாலை அமைப்பு


தினத்தந்தி 8 April 2023 12:15 AM IST (Updated: 8 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் சணல் பாய் விரித்து நவீன தொழில்நுட்பத்தில் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் புதிய தொழில் நுட்பத்துடன் முதன்முறையாக சணல் பாய் விரித்து சாலை அமைக்கப்படுகிறது.

புதிய சாலை

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் இணைப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு கிராமங்களுக்கு இணைப்பு சாலைகள் போடப்பட்டு உள்ளன. பிரதம மந்திரி கிராம சாலை திட்டப்பணிகள் மிகவும் தரமானதாகவும், நீடித்து உழைக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலை அமைக்கப்பட்டன. காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்படவில்லை. கரிசல் மண் உள்ள பகுதியில் மாநில நெடுஞ்சாலை மழைக்காலங்களில் அதிக ஈரப்பதம் காரணமாக அதிக பாரத்துடன் செல்லும் வாகனங்களால் சாலை பிதுங்கி பள்ளமாகின்றன. அதிக ஈரப்பதத்தால் சாலைகள் சேதமடைகின்றன. இது போன்ற இடர்பாடுகளை தவிர்க்க புதிய தொழில்நுட்பத்தை அதிகாரிகள் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

சணல் பாய்

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்முறையாக கோவில்பட்டி வட்டாரத்தில் சாத்தூரப்பநாயக்கன்பட்டியில் இருந்து மலைப்பட்டி வரை செல்லும் 2.4 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த சாலை செல்லும் பகுதி கரிசல் மண் நிறைந்த பகுதி ஆகும். இதனால் தண்ணீர் தேங்கி சாலை சேதம் அடையும் அபாயம் உள்ளது. இதனால் புதிய தொழில் நுட்பத்தில் சாலையில் சணல் பாய் விரித்து, அதன் மீது ஒன்னரை, முக்கால், அரை இன்ச் என மூன்று அடுக்கில் சாலை போடப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் பக்கவாட்டில் ஈரப்பதம் காரணமாக எவ்வித சேதமடையாது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனை கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் பாராட்டி உள்ளார். இதே போன்று அனைத்து கிராம சாலைகளையும் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.


Next Story