பட்டீஸ்வரம் அரசு மாதிரி பள்ளியில் சிறார் திரைப்பட திருவிழா
பட்டீஸ்வரம் அரசு மாதிரி பள்ளியில் சிறார் திரைப்பட திருவிழா நடந்தது.
கும்பகோணம்:
பட்டீஸ்வரம் அரசு மாதிரி பள்ளியில் சிறார் திரைப்பட திருவிழாவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
சிறார் திரைப்பட திருவிழா
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள அண்ணா அரசு மாதிரி பள்ளியில் நேற்று சிறார் திரைப்பட திருவிழாவின் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வித்துறை அரசு முதன்மைச்செயலாளர் காக்கர்லா உஷா தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த பள்ளிகளின் மாநில திட்ட இயக்குனர் சுதன் திட்ட விளக்க உரையாற்றினார். அரசு தலைமை கொறடா கோவி. செழியன், எம்.பி.க்கள் கல்யாண சுந்தரம், ராமலிங்கம், அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு சிறார் திரைப்பட திருவிழாவை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஓர் ஆய்வு தான்
சிறார் திரைப்பட விழா என்பது மாதம் ஒருமுறை ஒரு திரைப்படத்தை பள்ளியில் ஒளிபரப்பி குழந்தைகளை பார்க்க வைப்பது மட்டுமல்ல. திரைப்படத்தின் மூலம் குழந்தைகளின் எண்ண ஓட்டங்களை ஓர் மதிப்பீடு செய்து அவர்களை மேன்மைப்படுத்தும் நோக்கம் தான் இந்த திரைப்பட விழாவின் நோக்கம். இதன் மூலம் ஒரு திரைப்படத்தை பார்த்தால் குழந்தைகள் எப்படி படத்தை உணர்கிறார்கள்? மகிழ்ச்சியின் போது எப்படி இருக்கிறார்கள்? சோகத்தின் தாக்கம் என்ன? குதூகலம் என்ன? என்பதை பற்றி எல்லாம் ஓர் ஆய்வு தான்.
இதன் மூலம் குழந்தைகளுக்கு என்ன தேவை என்பதனை நாம் அறிய உள்ளோம். மேலும் இந்த திரைப்படங்களின் மூலம் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் என்ன உணர்ந்தார்கள் என்பதனை அறிந்து அவரது கருத்துக்களை கேட்க உள்ளோம்.
13 ஆயிரம் பள்ளிகளில்
திரைப்படத்தை பார்த்து கதையை உணர்ந்து சிறந்த கருத்துக்களை கூறும் 15 மாணவர்களை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அனுப்ப உள்ளோம். இவையெல்லாம் குழந்தைகளை மேம்படுத்துவதற்காக ஒரு கூடுதல் உற்சாகம் தான். எனவே இந்த திரைப்பட விழாக்கள் குழந்தைகள் தங்களை மேம்படுத்த பெரிதும் உதவும் என நம்புகிறோம். தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் பள்ளிகளில் இந்த விழாக்கள் நடக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் நன்றி கூறினார்.