மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரசாரம் கே.பாலகிருஷ்ணன் தகவல்
மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வருகிற 20-ந் தேதி முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை பிரசார இயக்கம் மேற்கொள்ள இருப்பதாக கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை,
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மனித உரிமை அமைப்பான 'மனிதம்' அமைப்பு ஆராய்ந்து தயாரித்த அறிக்கையை, சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில், கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார்.
அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
'மனிதம்' அமைப்பின் அறிக்கையை பார்க்கும்போது, கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணம் தற்கொலையாக இருப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. திட்டமிட்ட கொலையாக இருப்பதற்கான வாய்ப்புதான் அதிகமாக இருக்கிறது. பள்ளி நிர்வாகத்தினரின் பிள்ளைகளை இன்னும் காவல் துறை, சி.பி.சி.ஐ.டி. என எந்த விசாரணை அமைப்பும் விசாரிக்காதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மாநிலம் தழுவிய மாநாடு
இதுதவிர, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், 'இந்தியாவின் இருள் அகற்றுவோம் மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்' என்ற தலைப்பில் வருகிற 20-ந் தேதி முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை மோடி அரசின் 8 ஆண்டு கால மோசமான நடவடிக்கைகளை விளக்கும் விழிப்புணர்வு பிரசார இயக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது.
5 ஆயிரம் குழுவினர் ஆங்காங்கே தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தி 50 லட்சம் குடும்பத்தினரிடம் பிரசாரத்தை கொண்டு செல்ல உள்ளோம். இறுதியாக செப்டம்பர் 5-ந் தேதி சென்னையில் மாநிலம் தழுவிய மாநாட்டை நடத்த உள்ளோம். இதில் அகில இந்திய தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்கரத் கலந்து கொள்ள இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில குழு உறுப்பினர் பத்ரி, மனிதம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.