கோப்பையுடன் கபடி வீரர் உடல் அடக்கம்


கோப்பையுடன் கபடி வீரர் உடல் அடக்கம்
x

பண்ருட்டி அருகே கோப்பையுடன் கபடி வீரர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கடலூர்

பண்ருட்டி:

பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் பெரிய குரங்கணி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் சஞ்சய் என்கிற விமல்ராஜ் (வயது 21). சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

கபடி வீரரான இவர், 24-ந்தேதி இரவு நடந்த கபடி போட்டியில் தங்கள் ஊரை சேர்ந்த அணிக்காக விமல்ராஜ் விளையாடினார். அப்போது ரெய்டு சென்ற விமல்ராஜ், எதிரணியினரிடம் பிடிபடாமல் துள்ளி குதித்து தாவினார். அப்போது எதிரணி வீரர் ஒருவர் அவரை மடக்கி பிடித்தார். இதன் பின்னர் மெல்ல எழுந்திருக்க முயன்ற விமல்ராஜ், எழுந்திருக்க முடியாமல் சுருண்டு விழுந்து, பரிதாபமாக உயிரிழந்தார். இவரது இறப்பு குடும்பத்தினரை மட்டுமின்றி த மிழகம் முழுவதும் உள்ள கபடி வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர், விமல்ராஜியின் சொந்த கிராமத்தில் இறுதி சடங்கு நடந்தது. இதில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தினர். மாலையில் அங்குள்ள இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, அவர் பெற்ற பெரிய அளவிலான பரிசு கோப்பையும் அவருடன் சேர்த்து வைக்கப்பட்டது. முன்னதாக, விமல்ராஜியின் உடலுக்கு நெய்வேலி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சபா.ராஜேந்திரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


Next Story