கபடி போட்டியில் சுருண்டு விழுந்து வீரர் சாவு


கபடி போட்டியில் சுருண்டு விழுந்து வீரர் சாவு
x

பண்ருட்டி அருகே நடந்த கபடி போட்டியில் சுருண்டு விழுந்து வீரர் ஆடுகளத்திலேயே உயிரிழந்தார்.

கடலூர்

பண்ருட்டி;

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மானடிக்குப்பம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த கபடி குழு சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் 63 அணிகள் பங்கேற்றன.

நேற்று இரவு நடந்த போட்டியில் பெரியபுறங்கணியும், கீழகுப்பம் அணியும் மோதின. இதில் பெரியபுறங்கணி அணிக்காக அதே கிராமத்தை சேர்ந்த செல்வம் மகன் சஞ்சய் என்கிற விமல்ராஜ் (வயது 22) என்பவர் கலந்து கொண்டு விளையாடினார்.

வீரர் சாவு

பரபரப்பான கட்டத்தில் விமல்ராஜ் ரெய்டு சென்றார். அவரை எதிர் அணியினர் பிடிக்க முயன்றனர். உடனே விமல்ராஜ், அவர்களிடம் பிடிபடாமல் இருக்க துள்ளி குதித்து தாவினார். அப்போது கீழே விழுந்த அவரை, எதிர் அணியை சேர்ந்த விளையாட்டு வீரர் ஒருவர் மடக்கினார். அப்போது அவரது கால், விமல்ராஜின் தொண்டை மற்றும் நெஞ்சு பகுதியில் இருந்தது.

உடனே விமல்ராஜ் எழுந்திருக்க முயன்றார். ஆனால் அவரால் எழுந்திருக்க முடியாமல் திடீரென சுருண்டு விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக வீரர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே விமல்ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

போட்டி பாதியிலேயே நிறுத்தம்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கபடி வீரர் சுருண்டு விழுந்து இறந்ததால் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. உயிரிழந்த வீரரின் உடலுக்கு கல்லூரி மாணவர்கள், கபடி வீரர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

சேலம் கல்லூரி மாணவர்

சிறுவயதிலேயே கபடி விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட விமல்ராஜ், தீவிர பயிற்சி மேற்கொண்டு மாவட்ட, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று தனது அணிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். விமல்ராஜ் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. ஜியாலஜி 3-ம் ஆண்டு படித்து வந்தார். அங்குள்ள கபடி அகாடமியிலும் பயிற்சி பெற்று வந்தார்.

விடுதியில் தங்கி இருந்த விமல்ராஜ், மானடிக்குப்பத்தில் நடந்த போட்டியில் பங்கேற்பதற்காக வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story