தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கபடி வீரர் பலி
தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கபடி வீரர் உயிரிழந்தார்.
கொள்ளிடம் டோல்கேட்:
கபடி வீரர்கள்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலுகா, வடக்கு கொளக்குடி பகுதியை சேர்ந்த பூராசாமியின் மகன் சரத்குமார்(வயது 21). இவரும், அதே பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் கதிர்(21), ராமமூர்த்தி மகன் மணிமாறன் (21), அரியலூர் மாவட்டம், தழுதாழை மேடு பகுதியை சேர்ந்த திலகர் மகன் ஆகாஷ் (19) ஆகியோரும் நண்பர்கள். மேலும் இவர்கள் கபடி வீரர்களும் ஆவார்கள்.
இந்நிலையில் நேற்று திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் நடைபெற்ற கபடி போட்டியில் கலந்து கொள்வதற்காக 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி வந்துள்ளனர். மோட்டார் சைக்கிளை சரத்குமார் ஓட்ட மற்ற 3 பேரும் பின்னால் அமர்ந்திருந்தனர்.
சாவு
சிதம்பரம் - திருச்சி புதிய தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட்டை அடுத்த பனமங்கலம் அருகே வந்தபோது பாலத்தில் உள்ள ஒரு வளைவில் மோட்டார் சைக்கிளை சரத்குமார் திருப்பினார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சரத்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 ேபரும் பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சரத்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.