கபடி போட்டியில் பங்கேற்ற வீரர் திடீர் சாவு
கபடி போட்டியில் பங்கேற்ற வீரர் மாரடைப்பு காரணமாக திடீரென இறந்தார்.
கரூர்,
கரூர் மாவட்டம் கணக்கப்பிள்ளையூரில் நேற்று முன்தினம் இரவு கபடி போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு ஊர்களை சேர்ந்த கபடி அணி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் திண்டுக்கல் மாவட்டம், காச்சக்காரன்பட்டி பகுதியை சேர்ந்த மாணிக்கம் (வயது 26) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கலந்து கொண்டு விளையாடினார். அந்த அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றது. பின்னர் அடுத்த போட்டி வரும் வரை வீரர்கள் ஓய்வெடுக்க சென்றுள்ளனர். அப்போது பயிற்சியாளரும், வீரருமான மாணிக்கம் தனக்கு நெஞ்சு வலிப்பதாக தனது சக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.
மாரடைப்பால் சாவு
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அய்யர்மலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக குளித்தலை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். ஆனால் வழியிலேயே மாணிக்கம் பரிதாபமாக இறந்தார்.
அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.
முதல் பரிசுக்கான கோப்பை
இந்தநிலையில் மாணிக்கத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக கணக்கப்பிள்ளையூரில் கபடி போட்டி நடத்திய விழாக்குழுவினர் முதல் பரிசுக்கான கோப்பை மற்றும் பரிசுத்தொகை ரூ.20 ஆயிரத்தை மாணிக்கத்தின் குடும்பத்தாரிடம் வழங்கினர். கபடி விளையாட வந்தவர் திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.