கடமலை-மயிலை ஒன்றியக்குழு தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்


கடமலை-மயிலை ஒன்றியக்குழு தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்
x

கடமலை-மயிலை ஒன்றியக்குழு தலைவரை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. கவுன்சிலர்கள் ஆர்.டி.ஓ.விடம் பரிந்துரை செய்தனர்

தேனி

கடமலை-மயிலை ஒன்றியத்தில் 14 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் ஒன்றியக்குழு தலைவரான அ.தி.மு.க.வை சேர்ந்த சந்திராசந்தோசம் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் தடுப்பு பணிக்காக பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட பொருட்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தி.மு.க. கவுன்சிலர்கள் 9 பேர் மற்றும் அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வை ஆதரித்த 2 கவுன்சிலர்கள் ஒன்றிய தலைவர் மீது புகார் கூறினர்.

இந்த நிலையில் இது தொடர்பான கூட்டம் நேற்று மயிலாடும்பாறை ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு பெரியகுளம் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) சாந்தி தலைமை தாங்கினார். ஆண்டிபட்டி தாசில்தார் திருமுருகன், கடமலை-மயிலை ஒன்றிய ஆணையர்கள் திருப்பதிமுத்து, திருப்பதிவாசகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒன்றியக்குழு தலைவர் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க.வை சேர்ந்த தலா ஒரு கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை. ஒன்றியக்குழு தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுப்பிய 11 கவுன்சிலர்களில் 10 பேர் மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 11 பேர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு ஒன்றியக்குழு தலைவர் அளித்திருந்த விளக்கத்தை ஆர்.டி.ஓ. படித்து காண்பித்தார். ஆனால் ஒன்றியக்குழு தலைவரின் பதில் ஏற்கத்தக்கதாக இல்லை எனக்கூறி கவுன்சிலர்கள் அனைவரும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஒருமனதாக பரிந்துரை செய்தனர். இதனை ஏற்காத அ.தி.மு.க. கவுன்சிலர் கூட்டத்தின் போது வெளிநடப்பு செய்தார்.

இதனையடுத்து பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததால் ஒன்றிய குழு தலைவர் பதவி நீக்கம் தொடர்பான பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ. அதனை அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அரசுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து கூட்டம் முடிவடைந்தது.


Next Story