கடமலைக்குண்டு, உப்புத்துறையில்பழங்குடியினருக்கான தொகுப்பு வீடுகள் சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கடமலைக்குண்டு, உப்புத்துறையில் பழங்குடியினருக்கான தொகுப்பு வீடுகள் சீரமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கடமலைக்குண்டு, உப்புத்துறை. தாழையூத்து உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 2007-ம் ஆண்டு பழங்குடியின மக்களுக்கு 60 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டது. இதையடுத்து மலைப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் அனைவரும் தொகுப்பு வீடுகளில் குடியேறினர். இந்த நிலையில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்ட பின்பு எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதன் காரணமாக பெரும்பாலான வீடுகளில் மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. எனவே மழை பெய்யும்போது மழை நீர் மேற்கூரை வழியாக வீட்டிற்குள் கசிந்து வருகிறது. மேலும் அவ்வபோது வீட்டின் மேற்கூரையில் இருந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. வீடுகளை சீரமைக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வீடு இடிந்து விடும் என்ற அச்சத்தில் உப்புத்துறை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் மீண்டும் மலைகளில் குடியேறி விட்டனர். வீடுகள் சேதம் மற்றும் குடிநீர், சுற்றுச்சுவர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மீதமுள்ள குடும்பத்தினரும் மலைப்பகுதியில் குடியேறும் மனநிலையில் உள்ளனர். எனவே கடமலைக்குண்டு, உப்புத்துறை, தாழையூத்து உள்ளிட்ட கிராமங்களில் பழங்குடியினருக்கு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை முறையாக சீரமைக்க வேண்டும். மேலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.