மதவாதத்தை புறந்தள்ளும் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்- காதர் மொய்தீன்


மதவாதத்தை புறந்தள்ளும் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்- காதர் மொய்தீன்
x

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மதவாதத்தை புறந்தள்ளும் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் கூறினார்.

தஞ்சாவூர்

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மதவாதத்தை புறந்தள்ளும் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் கூறினார்.

பொதுக்குழு கூட்டம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட பொதுக்குழு நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுல்தான் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் ஜமால் முகமது இப்ராகிம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தேசிய தலைவர் காதர் மொய்தீன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நல்ல எதிர்காலத்தின் தொடக்கம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி நல்லாட்சியாக தொடர்கிறது. மு.க.ஸ்டாலின் தனக்கு உறுதுணையாக மகன் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கி உள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 5-வது முறையாக முதல்-அமைச்சரான பிறகு தனது மகன் மு.க.ஸ்டாலினை அமைச்சராக்கினார்.

ஆனால், மு.க.ஸ்டாலின் 2 ஆண்டுகளிலேயே தனது மகன் உதயநிதி ஸ்டாலினை பொறுப்பு மிக்க அமைச்சராக்கி உள்ளார். உதயநிதி ஸ்டாலின் நல்ல சிந்தனை உடையவர். அனைவரிடமும் நெருக்கமாக பழகக்கூடியவர். அவர் பதவியேற்றது தமிழக அரசியலின் நல்ல எதிர்காலத்திற்கு தொடக்கமாக இருக்கும்.

மதவாதத்தை புறந்தள்ளும் கட்சிகள்

ஜி-20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை ஏற்கிறது என்பது இந்தியாவுக்கான தனிப்பெருமை ஆகும். இதன்மூலம் இந்தியாவுக்கு மிகப்பெரிய அந்தஸ்து கிடைக்கும். இந்த மாநாடு மூலம் இந்தியாவுக்கு பெயரும், புகழும் கிடைக்கும்.

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவில் உள்ள சமூக நீதியை ஏற்றுக்கொண்ட கட்சிகள், மதவாதத்தை புறந்தள்ளுகின்ற கட்சிகள், முற்போக்கு சிந்தனை உடைய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்.

சீனாவுடனான எல்லை பிரச்சினையில் அனைவரும் ஒன்று கூடி குரல் எழுப்பியதை பார்க்கும்போது, வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதற்கான அஸ்திவாரம் போடப்பட்டுவிட்டது.

3-வது அணிக்கு வாய்ப்பு இல்லை

ஜி-20 மாநாட்டில் மோடியை முன்னிலைப்படுத்திதான் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது நம் நாட்டிற்கு கிடைத்த பெருமை, மோடியின் காலத்தில்தான் வந்தது. நாட்டு மக்கள் பிரதமர் மோடியை சிறந்தவர் என்று கூறுவதற்கு நான் உடன்படுகிறேன்.

வரும் தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டி என்பதை சென்னையில் நடக்க உள்ள மாநாட்டின்போது முடிவெடுப்போம். பா.ஜனதா மற்றும் அதனுடன் சார்ந்த கட்சிகளுடன் அரசியல் தொடர்பு வைத்துக் கொள்வதில்லை. பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? என்பதை நாட்டு மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். வரும் தேர்தலில் 3-வது அணிக்கு வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story