தென்மண்டல தபால்துறை சார்பில் மதுரையில் இருந்து கொல்கத்தாவிற்கு கதிசக்தி பார்சல் ரெயில்


தென்மண்டல தபால்துறை சார்பில்  மதுரையில் இருந்து கொல்கத்தாவிற்கு கதிசக்தி பார்சல் ரெயில்
x

தென்மண்டல தபால்துறை சார்பில் மதுரையில் இருந்து கொல்கத்தாவிற்கு கதிசக்தி பார்சல் ரெயில் இயக்கப்பட உள்ளது.

மதுரை


தென்மண்டல தபால்துறை சார்பில் மதுரையில் இருந்து கொல்கத்தாவிற்கு கதிசக்தி பார்சல் ரெயில் இயக்கப்பட உள்ளது.

கதிசக்தி பார்சல் ரெயில்

மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் மற்றும் தென்மண்டல தபால்துறைத்தலைவர் சார்பில் கதிசக்தி பார்சல் ரெயில் திட்டம் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் படி, வணிகர்களின் இருப்பிடத்திற்கே சென்று தபால்துறையினர் பார்சல்களை பெற்று அதனை ரெயில் மூலம் அனுப்பி வைத்து, அங்கிருந்து சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது அலுவலகத்திற்கு கொண்டு சேர்ப்பர். இதற்காக கையாளும் கட்டணம் மற்றும் பார்சல் கட்டணம் வசூலிக்கப்படும். ரெயில்வேயில் முதல் முறையாக ஒரு கி.மீ. தூரத்துக்கு ஒரு கிலோ எடை கொண்ட பார்சலுக்கான கட்டணம் என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் படி, மதுரை-சென்னை தேஜஸ் ரெயிலில் தபால்துறை மூலம் பார்சல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய ரெயில்வேயில் 15 பகுதிகளில் இருந்து தபால்துறையுடன் இணைந்து இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த வியாழக்கிழமை மேலும் 4 இடங்களில் இருந்து இந்த பார்சல் ரெயில் இயக்கப்பட்டது.

தடையற்ற போக்குவரத்து

அதனை தொடர்ந்து, தென்னக ரெயில்வேயில் முற்றிலும் பார்சல் பெட்டிகளை கொண்ட கதிசக்தி பார்சல் ரெயில் மதுரை கூடல்நகர் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில், மதுரையில் இருந்து திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம், கூடூர், விஜயவாடா வழியாக கொல்கத்தாவில் உள்ள ஹவுரா ரெயில் நிலையம் வரை செல்கிறது. மற்ற சரக்கு ரெயில்களை போல இல்லாமல், கதிசக்தி ரெயில் விரைவில் பார்சல்களை டெலிவரி செய்யும் வகையில் தடையற்ற ரெயில் போக்குவரத்துக்கு ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ரெயில் வாரந்தோறும் இயக்கப்பட உள்ளது. இதில், 35 கிலோவுக்கு மேல் உள்ள பார்சல்களை தபால்துறை மூலம் அனுப்பி வைக்கலாம். ரெயிலில் அனுப்பப்படும் பார்சல்களுக்கு காப்பீடு வசதியும் உள்ளது. மதுரை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சிறு, குறுந்தொழில் முனைவோர், விவசாயிகள், வணிகர்களுக்கு இந்த ரெயில் வசதியாக இருக்கும்.

இதற்கான ஏற்பாடுகளை தென்மண்டல தபால்துறைத்தலைவர் ஜெய்சங்கர் தலைமையில், ரெயில்வே தபால்சேவை கண்காணிப்பாளர் ஜவகர் உள்ளிட்ட தபால்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story