கைலாசநாதர் தேர் கொட்டகை உயர்த்தப்பட்டது
தினத்தந்தி செய்தி எதிரொலியால் கைலாசநாதர் தேர் கொட்டகை உயர்த்தப்பட்டது
ஆரணி
ஆரணி கோட்டை கைலாசநாதர் கோவில் பெரிய தேர் கடந்த 2012-ம் ஆண்டு தேரோட்டத்தின் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் பலியானார்கள். மேலும் தேர் முழுவதும் சேதமடைந்தது.
இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.31 லட்சம் மதிப்பில் புதிதாக பெரிய மரத்தேர் வடிவமைக்கப்பட்டது.
இந்த தேர் நிறுத்த கொட்டகை (மேற்கூரை) அமைக்கப்படாமல் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் மேற்கூரை அமைப்பதற்கு டெண்டர் விட்ட நிலையில் போதிய நிதி இல்லை என நிறுத்தப்பட்டது.
இது சம்பந்தமாக துறைரீதியாக தேர் உற்சவ உபயதாரர்கள் மூலமாக பணியை பூர்த்தி செய்தனர். இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக தேர் கொட்டகை அமைக்க ரூ.16½ லட்சம் மதிப்பில் டெண்டர் விடப்பட்டு அதற்கான பணியும் முடிக்கப்பட்டு விட்டது.
ஆனால் தேரை விட குறைவான அளவில் தேர் கொட்டகை அமைக்கப்பட்டது. இதனால் தேர் கொட்டகைக்குள் நிறுத்தப்படாமல் வெயிலிலும், மழையிலும் நனைந்தபடி இருந்தது.
இதுகுறித்து தினத்தந்தியில் சில தினங்களுக்கு முன்பு படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை அழைத்து தேர் நிறுத்துவதற்கு ஏற்ப தேர் கொட்டகையை உயர்த்தி அமைக்குமாறும் கூறினர். இதையடுத்து கொட்டகை உயர்த்தி அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தேரையும் கொட்டகைக்குள் நிறுத்துவதற்கு தயார் செய்யப்பட்டுள்ளது.