கலாஷேத்ரா பாலியல் விவகாரம்: மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பேராசிரியர்கள் பணி நீக்கம் -ஐகோர்ட்டில் தகவல்


கலாஷேத்ரா பாலியல் விவகாரம்: மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பேராசிரியர்கள் பணி நீக்கம் -ஐகோர்ட்டில் தகவல்
x

பாலியல் தொல்லை விவகாரத்தில் மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பேராசிரியர்களை கலாஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு அங்குள்ள பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. அதில், கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் இடம் பெற்று இருந்தார். இதை எதிர்த்து, 7 மாணவிகள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அதில், மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோரின் பிரதிநிதிகள் குழுவில் இடம் பெற வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு, நீதிபதி என்.சேஷசாயி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கலாஷேத்ரா அறக்கட்டளை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், கலாஷேத்ரா கல்வி நிறுவனங்களில் மாணவிகள் பாதுகாப்புக்கான கொள்கைகள் வகுக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.

பணி நீக்கம்

மாணவிகள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆர்.வைகை, "மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கிய நபரை கல்லூரி வளாகத்துக்குள் அனுமதிக்க முடியாது என தெரிவித்த கலாஷேத்ரா நிறுவனம், சமீபத்தில் நடத்திய நிகழ்ச்சியில் குற்றம் சாட்டுக்கு உள்ளான பேராசிரியரை அழைத்துள்ளது. மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், அதை மீறி பேராசிரியர்களை கல்லூரி நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. தற்போது கலாஷேத்ரா வகுத்துள்ள கொள்கை மாணவிகள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இல்லை" என்று கூறினார்.

ஆலோசனை

இதையடுத்து, மாணவிகள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு தொடர்பான கொள்கையில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து ஆலோசனைகள் அளிக்கும்படி இரு தரப்புக்கும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 13-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story