7-வது திருமணத்துக்கு முயன்றபோது சிக்கியவர்: கல்யாணராணியின் கூட்டாளிகளான 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


7-வது திருமணத்துக்கு முயன்றபோது சிக்கியவர்:  கல்யாணராணியின் கூட்டாளிகளான   4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Sept 2022 12:15 AM IST (Updated: 25 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் அருகே 7-வது திருமணம் செய்ய முயன்றபோது கைதான கல்யாணராணியின் கூட்டாளிகளான 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே 7-வது திருமணம் செய்ய முயன்றபோது கைதான கல்யாணராணியின் கூட்டாளிகளான 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுப்பெண் மாயம்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வெங்கரை அருகே உள்ள கள்ளிபாளையத்தை சேர்ந்தவர் தனபால் (வயது 35). இவருக்கும், மதுரையை சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் அதே ஊரை சேர்ந்த புரோக்கர் பாலமுருகன் மூலம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து 2 நாட்கள் கழித்து புதுமாப்பிள்ளை தனபால் காலை எழுந்து பார்த்தபோது மனைவி மாயமானதும், அவர் வீட்டில் இருந்த நகை, துணிமணிகள் ஆகியவற்றை திருடி சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து தனபால் வேலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்ய பெண் தேடியபோது வேறு ஒரு புரோக்கர் மூலம் சந்தியாவின் போட்டோ கிடைத்தது. இதையறிந்த தனபால் மற்றும் உறவினர்கள் அந்த நபர் மூலம் மதுரையை சேர்ந்த பெண் புரோக்கர் தனலட்சுமியிடம் (45) பேசி திருச்செங்கோட்டில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

மோசடி திட்டம்

அதன்படி சந்தியா, மதுரையைச் சேர்ந்த பெண் புரோக்கர் தனலட்சுமி, உறவினர் அய்யப்பன், தனலட்சுமியின் உறவினர் ஏ.சி. மெக்கானிக் கவுதம், கார் டிரைவர் ஜெயவேல் ஆகிய 5 பேர் காரில் திருச்செங்கோடு வந்தபோது அங்கிருந்த தனபால் மற்றும் உறவினர்கள் சந்தியா உள்ளிட்ட 5 பேரையும் பிடித்து வேலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சந்தியா பல புரோக்கர்கள் மூலம் தனபால் உள்பட 6 பேரை ஏமாற்றி திருமணம் செய்ததும், தற்போது 7-வது திருமணம் செய்து நகை, பணம் மோசடி செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது.

இதற்கிடையில் அய்யப்பனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு இருந்ததால் அவரை போலீசார் சிகிச்சைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து அய்யப்பன் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

வலைவீச்சு

இதைத்தொடர்ந்து 'கல்யாணராணி' சந்தியா, தனலட்சுமி, கவுதம், ஜெயவேல் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களுடைய கூட்டாளிகளான திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த புரோக்கர் பாலமுருகன், மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த ரோஷினி, திருப்பூர் மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த மாரிமுத்து மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய விருதுநகர் மாவட்டம் மேட்டமலையை சேர்ந்த அய்யப்பன் ஆகிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

'கல்யாணராணி' சந்தியா ஒவ்வொரு திருமணத்தின்போதும், மணமகன் வீட்டாரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி கொள்வார். திருமணம் முடிந்து 2 நாட்கள் மட்டும் மாப்பிள்ளையுடன் தங்கி இருப்பாராம். பின்னர் இரவில் கணவன் நன்றாக தூங்கிய பின்பு அங்கிருக்கும் நகை, பணம் மற்றும் துணிமணிகளை எடுத்து விட்டு தலைமறைவாகிவிடுவார். இவர்களுக்கு மூளையாக பாலமுருகனும், தனலட்சுமியும் ெசயல்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் மதுரையை சேர்ந்த பெண் புரோக்கர் தனலட்சுமி, சந்தியாவை போல் இன்னும் 3, 4 பெண்களை வைத்து கடந்த சில ஆண்டுகளாக கல்யாண மோசடியில் ஈடுபட்டு வந்ததும், காங்கேயம், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மாதம் ஒருமுறை இதுபோன்று மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. மேலும் 'கல்யாணராணி' சந்தியாவுக்கு ஒரு மகன், மகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் குறிவைத்து கல்யாண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதன்பேரில் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story