கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் தைப்பூச திருவிழா:பூத வாகனத்தில் சுவாமி வீதியுலா
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பூத வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
கழுகுமலை:
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் தைப் பூச திருவிழாவில் பூத வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூச திருவிழா
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் முக்கிய வீதிகளின் வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த வருகிறார்.
தினமும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் மண்டகபடி திருவிழா நடைபெறுகிறது. நேற்று முன்தினம் இரவு கம்மவார் சமுதாயம் சார்பில் மண்டகபடிதிருவிழா நடைபெற்றது.
இத்திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை நடந்தது. காலை 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை முடிந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
பூதவாகனத்தில் எழுந்தருளல்
நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சுவாமி, வள்ளி தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட பூத வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவிலில் இருந்து சுவாமி பூத வாகனத்தில் கம்மவார் மண்டகபடியை வந்தடைந்து. அங்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கம்மவார் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.