கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில்தைப் பூச திருவிழா தேரோட்டம்


தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் தைப் பூச திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் தைப் பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தைப்பூச திருவிழா

கழுகுமலை கழுகாலமூர்த்தி குடவரை கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி, வள்ளி- தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தினமும் இரவு 8 மணியளவில் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் மண்டகபடி திருவிழா நடைபெற்றது. முக்கிய விழாவான தேர்திருவிழா நேற்று நடைபெற்றது.

தோரோட்டம்

இதையொட்டி நேற்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. காலை 7.30 மணியளவில் சுவாமி, வள்ளி- தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 10.30 மணியளவில் கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் உள்பட திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தெற்கு ரத வீதியில் இருந்து தொடங்கிய தோரோட்டம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

பக்தர்கள் கிரிவலம்

மாலை 6 மணிக்கு திரளான பக்தர்கள் திருவிளக்கு ஏந்தி மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். தொடர்ந்து இரவு 7 மணியளவில் கோவில் சீர்பாதம் தாங்கிகள் சார்பில் இந்திர வாகனத்தில் சுவாமி வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி முக்கிய வீதிகளின் வழியாக வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

தைப் பூச தேர் திருவிழாவில் கழுகுமலை மற்றும் சுற்றுப்புறத்திலுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், சுப்பாராஜ், ராஜ்மோகன், மாரியப்பன், ரவிச்சந்திரன் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story