அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலி வேட்டை
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழாவின் எட்டாம் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை அய்யா வைகுண்ட சாமி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
தென்தாமரைகுளம்:
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழாவின் எட்டாம் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை அய்யா வைகுண்ட சாமி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
வைகாசி திருவிழா
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கடந்த 27-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று அய்யா வைகுண்ட சாமி வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், மாலை 6 மணிக்கு அய்யா வைகுண்ட சாமி வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா வைகுண்டசாமி கொலுவீற்றிருக்க கலிவேட்டைக்கு வாகனம் புறப்பட்டு சென்றது. இந்த நிகழ்ச்சிக்கு பால.ஜனாதிபதி தலைமை தாங்கினார். பால. லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைப்பதி முன்பு இருந்து புறப்பட்ட வாகனம் தலைமைப்பதியை சுற்றிவந்து முத்திரி கிணற்றங்கரைக்கு சென்றது. அங்கு கூடியிருந்த திரளான அய்யாவழி பக்தர்கள் முன்னிலையில் அய்யா வைகுண்டசாமி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. எட்டாம் திருவிழா பள்ளியறை பணிவிடைகளை ஜனா.யுகேந்த், ஜனா. வைகுந்த் ஆகியோர் செய்திருந்தனர்.
தவக்கோல காட்சி
முத்திரி கிணற்றங்கரையில் இருந்து புறப்பட்ட குதிரை வாகனம் சுற்றுப்பகுதி கிராமங்களான செட்டிவிளை, சாஸ்தான்கோவில் விளை, கோட்டையடி புதூர், சோட்டப்பணிக்கன்தேரிவிளை, காமராஜபுரம் வழியாக இரவு 9 மணிக்கு சாமிதோப்பு தலைமை பதியை வந்தடைந்தது. கிராமங்களுக்கு வாகனம் செல்லும் போது அப்பகுதி அய்யாவழி பக்தர்கள் அய்யாவுக்கு சுருள் படைத்து ஆசி பெற்றனர்.
இரவு 10 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலில் அய்யா வைகுண்ட சாமியின் தவக்கோல காட்சி நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. கலிவேட்டை நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தேரோட்டம்
இன்று (சனிக்கிழமை) இரவு அனுமன் வாகன பவனியும், நாளை நடைபெறும் பத்தாம் திருவிழாவில் அய்யா வைகுண்ட சுவாமி இந்திர வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும் இரவு வாகன பவனியும், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு ஆகியவையும் நடைபெறுகிறது.