கலிங்கப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் தரம் உயர்த்தப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாக விரைவில் தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
திருவேங்கடம்:
கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் முன்னிலை வைத்தார். சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் முரளிசங்கர் வரவேற்று பேசினார்.
விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கனிமொழி எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். 5 கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ.2 ஆயிரத்துக்கான காசோலையும், 51 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பும், 10 மாணவ-மாணவிகளுக்கு கண்ணொளி திட்டத்தின் கீழ் கண் கண்ணாடிகளும், 5 பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடர்ந்து 4 ஆண்டுகளாக தேசிய தர நிர்ணய சான்று பெற்று வருவது பாராட்டுக்குரியது. தமிழ்நாட்டில் காஞ்சீபுரம், தென்காசி, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மட்டும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இல்லாதது குறையாக உள்ளது. இந்த ஆண்டு தமிழகத்துக்கான மருத்துவக்கல்லூரிகளை மத்திய அரசு தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தரும் பட்சத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மூலம் தென்காசி மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் தென்காசி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ரூ.20 கோடியிலும், சிறுவர் மருத்துவமனை ரூ.22 கோடியிலும், தென்காசியில் மருந்து சேமிப்பு கிடங்கு ரூ.6 கோடியிலும் கட்ட டெண்டர் கோரப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் மக்களை தேடி மருத்துவம் என்ற இயக்கம் 73 சதவீதம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தென்காசி மாவட்டத்தில் கலெக்டரின் முயற்சியால் 98 சதவீதம் என்ற இலக்கை எட்டி இருப்பது பாராட்டுக்குரியது. கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், விரைவில் 30 படுக்கைகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ மருத்துவமனைக்கு இடம் கொடுத்தோர் குடும்பத்தின் சார்பில் வாழ்த்தி பேசினார். தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜா, சதன் திருமலைக்குமார், பூமிநாதன், டாக்டர் ரகுராமன் ஆகியோரும் வாழ்த்தி பேசினர். விழாவில், ம.தி.மு.க. துணை பொது செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர்கள் (தூத்துக்குடி வடக்கு) ரமேஷ், (நெல்லை மத்தி) நிஜாம், தி.மு.க. மாவட்ட பொருளாளர் சங்கை சரவணன், குருவிகுளம் யூனியன் தலைவர் விஜயலட்சுமி கனகராஜ், குருவிகுளம் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் சீனிவாசன், கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் மணிமொழி சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர். குருவிகுளம் வட்டார மருத்துவ அலுவலர் முத்துக்குமார் நன்றி கூறினார். முன்னதாக வைகோவின் இல்லத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், கனிமொழி எம்.பி. ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.