விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய களியல் கிராம நிர்வாக அதிகாரி கைது


தினத்தந்தி 30 March 2023 12:15 AM IST (Updated: 30 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மரங்கள் ெவட்டுவதற்கு அனுமதி கேட்ட விவசாயியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய களியல் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

அருமனை:

மரங்கள் ெவட்டுவதற்கு அனுமதி கேட்ட விவசாயியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய களியல் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

விவசாயியிடம் லஞ்சம்

குமரி மாவட்டம் பத்துகாணி பகுதியை சேர்ந்தவர் புரோன். விவசாயியான இவர் தன்னுடைய நிலத்தில் உள்ள பலா மரம் உள்ளிட்ட சில மரங்களை வெட்டி அகற்ற அனுமதி கேட்டு களியல் கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

இந்த அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக முத்து (வயது 49) என்பவர் பணியாற்றினார். புரோன் கொடுத்த மனுவுக்கு முத்து உரிய பதிலளிக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார்.

பின்னர் புரோன், முத்துவை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது ரூ.2 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் அனுமதி தருவதாக கூறியுள்ளார்.

கிராம நிர்வாக அதிகாரி சிக்கினார்

ஆனால் லஞ்சம் கொடுக்க மனமில்லாத அவர் இதுகுறித்து நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுகளை புரோனிடம் கொடுத்தனர். பின்னர் கிராம நிர்வாக அதிகாரி முத்துவை நேரில் சந்தித்து அந்த பணத்தை கொடுக்கும்படி கூறினர்.

அதன்படி நேற்று காலை 10.30 மணிக்கு புரோன் களியல் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அதிகாரி முத்துவை சந்தித்து ரூ.2 ஆயிரம் கொடுத்தார். அந்த பணத்தை அவர் உடனடியாக வாங்கிக் கொண்டார்.

அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு எக்டர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரெமா மற்றும் போலீசார் அதிரடியாக கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்தனர்.

அங்கு கையும், களவுமாக லஞ்ச பணத்துடன் முத்துவை மடக்கி பிடித்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர் பதற்றத்திற்குள்ளானார். உடனே போலீசார் லஞ்ச பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அலுவலகத்தில் இருந்தபடி அவரிடம் சுமார் 4½ மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

சிறையில் அடைப்பு

அதே சமயத்தில் கணக்கில் வராத பணம் அலுவலகத்தில் ஏதேனும் இருக்கிறதா? எனவும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார்பில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைதான கிராம நிர்வாக அதிகாரி முத்துவின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் ராயகிரி ஆகும். தற்போது இவர் குடும்பத்துடன் குழித்துறை பகுதியில் தங்கியிருந்து களியல் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று வந்த நிலையில் விவசாயியிடம் லஞ்சம் வாங்கியதாக சிக்கியுள்ளார்.

குமரி மாவட்டத்தில் வடசேரியில் உள்ள மேற்கு கிராம நிர்வாக அலுவலகம், கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையை தொடர்ந்து லஞ்சம் வாங்கியதாக களியல் கிராம நிர்வாக அதிகாரி சிக்கிய சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் கிலியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story