காளியம்மன் கோவில் பொங்கல் விழா:வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா
கோவில்பட்டி காளியம்மன் கோவில் பொங்கல் விழாவில் வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் ஆடி பொங்கல் விழா கடந்த 30-ந்தேதி காலை 9 மணிக்கு அம்மனுக்கு மாக்காப்பு அலங்கார சிறப்பு தீபாரதனையுடன் தொடங்கியது.
இரவு 7 மணிக்கு அங்கையர்கண்ணியின் அருள் என்ற தலைப்பில் தேவி பக்தி சொற்பொழிவு நடைபெற்றது.
2-ம் நாள் காலை 9 மணிக்கு அம்மனுக்கு சந்தன அலங்கார சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சர்வம் சக்திமயம் என்ற தலைப்பில் சித்ரா கணபதியின் பக்தி சொற்பொழிவு நடைபெற்றது.
நேற்று முன்தினம் 3-ம் நாள் காலை 9 மணிக்கு தெற்கு நந்தவனத்தில் இருந்து பால்குடம் ஊர்வலம் நடந்தது. பகல் 12 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை 5 மணிக்கு பெண்கள் மாவிளக்கு ஏந்தி நகர்வலம் வந்தனர். மாலை 6 மணிக்கு 21 அக்னிக்கட்டி நகர்வலமும், இரவு 7 மணிக்கு மேல் காளியம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளிக் குடையின் கீழ் வீற்றிருந்து, தங்க குடம், வாளி கையில் ஏந்தி தீர்த்தம் எடுக்கும் திருக்கோலத்துடன் திருவீதி உலா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ. பி. கே. பழனிச்செல்வம், துணை தலைவர் எம். செல்வராஜ், செயலாளர் எஸ்.ஆர்.ஜெயபாலன், பொருளாளர் டி. ஆர். சுரேஷ் குமார், கோவில் தர்மகர்த்த எஸ். எம். மாரியப்பன், செயலாளர் மாணிக்கம் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.