கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்கவில்லை பொதுமக்கள் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் சுமார் 100 கிராமங்கள் மற்றும் 3 நகராட்சி, 5 பேரூராட்சிகளில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த திட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் குடிநீர் இணைப்புகள் தரமாக இல்லை எனவும், சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக தெரிகிறது.
எனவே ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டுள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஒவ்வொரு கிராமங்களுக்கும் அதிகாாிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்து சுகாதாரமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுபற்றி கள்ளக்குறிச்சி ஒன்றியம் வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பன் கூறுகையில், கடந்த ஆண்டு எனது வீட்டுக்கு ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய் அமைத்தனர். ஆனால் தரமாக போடாததால் ஒரு மாதத்தில் அந்த குழாய் உடைந்து விட்டது. குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கும் போது வீடு வரை கொடுக்காமல் தெருவில் உள்ள குழாயில் மட்டும் இணைப்பு கொடுத்து விட்டு வெளியே விட்டனர். இந்த குழாய் போடாத முன்பு எங்களுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைத்தது. ஆனால் தற்போது போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை என்றார்.
வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்த பச்சையம்மாள் கூறுகையில், ஏதோ வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் போட்டார்கள். ஆனால் அந்த குழாயையும் கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் போட்டுள்ளனர். அந்த குழாயும் போட்ட ஒரு மாதத்திலேயே உடைந்து விட்டது. கழிவுநீர் வாய்க்காலில் குழாய் போடப்பட்டுள்ளதால் சில நேரங்களில் குழாயில் ஓட்டை ஏற்பட்டு கழிவுநீர் கலந்து சுகாதாரமாற்ற முறையில் வருகிறது. தண்ணீரும் போதுமான அளவு கிடைப்பதில்லை. எனவே கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு சுகாதாரமான முறையில் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.