கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போனை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் -ஐகோர்ட்டு உத்தரவு


கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போனை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் -ஐகோர்ட்டு உத்தரவு
x

கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, புலன் விசாரணையை விரைந்து முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, விசாரணை குறித்து சி.பி.சி.ஐ.டி. தரப்பின் ரகசிய அறிக்கைகளை தாக்கல் செய்தார்.

கண்காணிப்பு

அப்போது நீதிபதி, இந்த வழக்கை மனுதாரர் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரி தான் தொடர்ந்துள்ளார். தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருவதால் இந்த வழக்கை ஏன் முடித்து வைக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் சங்கரசுப்பு, "ஐகோர்ட்டு இந்த வழக்கு விசாரணையை கண்காணித்து வருகிறது. ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. தரப்பில் 2 அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பான வீடியோ காட்சிகள் அடங்கிய சி.டி.யை எங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று வாதிட்டார்.

ஒத்துழைப்பு இல்லை

அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, "இந்த வழக்கின் புலன் விசாரணை முடியும் வரை வழக்கு தொடர்பான ஆவணங்களை மாணவியின் பெற்றோர் தரப்புக்கு வழங்கக்கூடாது என ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் புலன் விசாரணைக்கு மாணவியின் பெற்றோர் போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை. மாணவி பயன்படுத்திய செல்போனை வழங்கும்படி 3 முறை நோட்டீஸ் அனுப்பியும், இதுவரையில் வழங்கவில்லை. மரபணு சோதனைக்கும் ரத்த மாதிரிகளை வழங்க மறுக்கின்றனர்" என்று குற்றம் சாட்டி வாதிட்டார்.

ஒப்படைக்க வேண்டும்

இதையடுத்து நீதிபதி, "மரணம் அடைந்த மாணவி பயன்படுத்திய செல்போனை புலன் விசாரணை நடத்தி வரும் போலீசாரிடம் மாணவியின் பெற்றோர் ஒப்படைக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை அக்டோபர் 30-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டார்.


Next Story