கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு : பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு


கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு :  பள்ளி தாளாளர்  உள்பட 5 பேரும் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு
x

பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளனர்

விழுப்புரம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவு குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும் இவ்வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மாணவி மரண வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஒரு நாள் காவலில் எடுத்து அவர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

சுமார் 9 மணி நேர விசாரணைக்கு பின்னர் நீதிபதி புஷ்பராணியின் உத்தரவின்பேரில் அவர்கள் 5 பேரும் மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

தொடர்ந்து பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு தனித்தனியாக விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி மனுதாக்கல் செய்தனர். இந்த ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே 3 முறை விசாரணைக்கு வந்தபோது 5 பேருக்கும் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் 4-வது முறையாக அவர்களின் ஜாமீன் மனுக்கள் மகளிர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) சாந்தி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.வாதங்களை கேட்டறிந்த நீதிபதி சாந்தி, பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளனர்.விழுப்புரம் மகளிர் சிறப்பு கோர்ட்டு ஜாமின் மறுத்ததையடுத்து ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளனர்.தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரமில்லை என மனுவில் தகவல் தெரிவித்துள்ளனர்.


Next Story