9 மாதங்களுக்கு பிறகு தண்ணீரின்றி வறண்டு காணப்படும் 'கல்லணை'
கல்லணை 9 மாதங்களுக்கு பிறகு தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி:
கல்லணை 9 மாதங்களுக்கு பிறகு தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழர்களின் தொழில் நுட்பம்
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால் சோழன் காவிரி ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான். ஒரு நொடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் பாயும் காவிரியின் மீது அணை கட்டுவதற்கு தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்த காலத்திலேயே ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். அதன்படி காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்த பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன.
அதன் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டையும் ஒட்டிக்கொள்ளும் விதமாக செய்தனர். இதுவே கல்லணையை கட்ட பயன்படுத்தப்பட்ட அந்த கால தொழில்நுட்பமாக கருதப்படுகிறது.
அகண்ட காவிரி
உலக அளவில் மிகவும் பழமை வாய்ந்த அணையாக கல்லணை திகழ்கிறது. தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள தோகூர் கிராமத்தில் கல்லணை அமைந்துள்ளது. திருச்சியில் அகண்ட காவிரி என அறியப்படும் காவிரி ஆறு முக்கொம்பில் வடபுறமாக கொள்ளிடம், தென்புறமாக காவிரி என இரண்டாகப் பிரிகிறது. முக்கொம்பில் இவ்விடத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் மேலணை கட்டப்பட்டுள்ளது. காவிரிக்கும், கொள்ளிடத்துக்கும் இடையில் ஸ்ரீரங்கம் ஆற்றுத்தீவு உள்ளது.
அங்கிருந்து காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது. இங்கு காவிரி ஆறானது கொள்ளிடம், காவிரி, வெண்ணாறு, புது ஆறு என 4 ஆறுகளாக பிரிகிறது. காவிரி இவ்வாறு பிரியுமிடத்தில்தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது.
தண்ணீர் நிறைந்திருந்தது
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை வழக்கமாக ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்படும். ஆனால் கடந்த ஆண்டு (2022) மே மாதம் 24-ந் தேதியே அணை திறக்கப்பட்டது. முன்கூட்டியே அணை திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் இலக்கை தாண்டி குறுவை மற்றும் சம்பா சாகுபடி நடைபெற்றது.
மேட்டூர் அணை திறக்கப்பட்டதை தொடர்ந்து கல்லணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. கல்லணையில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் தொடர்ந்து 9 மாதங்கள் (இந்த மாதம் வரை) தண்ணீருடன் பசுமையாக காட்சி அளித்தது.
தண்ணீர் நிறுத்தம்
மேட்டூர் அணை வழக்கமான நடைமுறைப்படி கடந்த மாதம் (ஜனவரி) மாதம் 28-ந் தேதி மூடப்பட்டது. கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, புது ஆற்றில் விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்ப குறைந்த அளவில் தண்ணீர் அவ்வப்போது மாறி மாறி திறந்து விடப்பட்டது.
மேட்டூர் அணை மூடப்பட்ட பின்னர் கடந்த 22-ந் தேதி வரை கல்லணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், காவிரி, வெண்ணாறு ஆகிய ஆறுகளில் முழுவதுமாக தண்ணீர் விடுவது கடந்த 23-ந் தேதி மாலையுடன் நிறுத்தப்பட்டது.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
தற்போது கல்லணை முழுவதுமாக தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் அணை பரப்பில் தண்ணீர் இல்லாமல் மணல் வெளியாக காட்சி அளிக்கிறது. சிறிய அளவிலான தண்ணீர் கொள்ளிடம் மணல் போக்கி வழியாக வெளியேறி வருகிறது.
அணையில் உள்ள காவிரி, வெண்ணாறு ஆகிய பாலங்களின் கீழ் பகுதியில் முழுவதுமாக தண்ணீர் இன்றி காட்சி அளிக்கிறது. இதனால் கல்லணையை காண வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.