கள்ளழகர் கோவில் ஆடி தேரோட்டம் கோலாகலம்
கள்ளழகர் கோவில் ஆடி பெருந்திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அழகர்கோவில்,
கள்ளழகர் கோவில் ஆடி பெருந்திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆடி பெருந்திருவிழா
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக மதுரையை அடுத்த அழகர்் மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவில் விளங்குகிறது.
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவானது மீனாட்சி அம்மன் கோவிலிலும், கள்ளழகர் கோவிலிலும் நடைபெறும். அதற்கு அடுத்தபடியாக அழகர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழா என்பது ஆடிப்பெருந்திருவிழா ஆகும்.
இதில் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் அழகர் மலை அடிவாரத்தில் விமரிசையாக நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடிப்பெருந்திருவிழா நடைபெறவில்லை.
இந்த ஆண்டுக்கான விழாவை விமரிசையாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில், கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் தேவியருடன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் அன்னம், சிம்மம், அனுமன், கருடன், சேஷ, யானை, புஷ்ப சப்பரம், குதிரை போன்ற வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேரோட்டம் கோலாகலம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று காலையில் கோலாகலமாக நடந்தது.
இதையொட்டி அதிகாலையில் தேரில் தேவியர்களுடன் பெருமாள் எழுந்தருளினார்.
கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டத்தை காண முடியாமல் ஏமாற்றத்தில் இருந்த பக்தர்கள், இந்த ஆண்டு கள்ளழகர் கோவில் தேரோட்டத்தை காண அழகர் மலை அடிவாரத்தில் அலைகடலென திரண்டனர். காணும் இடம் எல்லாம் பக்தர்கள் தலையாக காட்சி தந்தது. காலை 6.20 மணிக்கு ஏராளமான பக்தர்கள் கோவிந்தா...கோபாலா... பக்தி கோஷங்களை எழுப்பி வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள்
தேரின் முன்னும் பின்னும் பல பக்தர்கள் சாமியாடியபடி வந்தனர். கோட்டை வாசல்களான 4 ரத வீதிகளையும் தேர் ஆடி அசைந்து கடந்து, காலை 10.10 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. அழகர் மலை அடிவாரத்தில் வலம் வந்த தேரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஏராளமானோர் நேர்த்திக்கடனாக முடிக்காணிக்கை செலுத்தினார்கள். நெல் உள்ளிட்ட தானியங்களை காணிக்கையாக பலர் வழங்கினர்.
இதே போல் மூலவர் சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவியருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
புனித நீராடினர்
நேற்று அழகர் மலை உச்சியில் ராக்காயி அம்மன் கோவிலில் உள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். முருகப் பெருமானின் 6-வது படைவீடான சோலைமலை முருகன் கோவிலிலும் தரிசனம் செய்தனர். அங்கு சுப்பிரமணிய சுவாமி, வித்தக விநாயகர், வேல் சன்னதியில் விசேஷ பூஜைகள் நடந்தன.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் பெரிய புள்ளான், வெங்கடேசன், அய்யப்பன், வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் சண்முகராஜ பாண்டியர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், இணை ஆணையர் செல்லத்துரை, துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள், உள்துறை பணியாளர்கள், செய்திருந்தனர்.
பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு இருந்தனர். இன்று (சனிக்கிழமை) 10-ம் நாள் விழா நடக்கிறது. நாளை உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.