கழுகாசலமூர்த்தி கோவில் வைகாசி விசாக திருவிழா; திரளான பக்தர்கள் தரிசனம்


கழுகாசலமூர்த்தி கோவில் வைகாசி விசாக திருவிழா; திரளான பக்தர்கள் தரிசனம்
x

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கழுகாசலமூர்த்தி கோவில்

தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.

நேற்று வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலசந்தி, திருப்பள்ளி எழுச்சி, திருவனந்தல் பூஜை நடைபெற்றது. விழாவையொட்டி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வீதி உலா

மதியம் 12.30 மணிக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு கழுகாசலமூர்த்தி, வள்ளி- தெய்வானையுடன் மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

விளாத்திகுளம்

விளாத்திகுளம் ஆற்றுப்பாலம் பகுதியில் அமைந்துள்ள ஆனந்த விநாயகர் கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய உற்சவ மூர்த்தியான சுப்பிரமணிய சுவாமிக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் எலுமிச்சை, மஞ்சள், சந்தனம், தேன், இளநீர், தயிர் உள்ளிட்ட 14 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பட்டாடை உடுத்தி, அரளி, செம்பருத்தி உள்ளிட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் எட்டயபுரம் நடுவிற்பட்டி மெயின் பஜாரில் அமைந்துள்ள வள்ளி சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story