சாக்கடை கால்வாய் அமைக்க இடையூறு
சாக்கடை கால்வாய் அமைக்க இடையூறு செய்தவர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சாக்கடை கால்வாய்
திருப்பூர் 54-வது வார்டு ஆலங்காடு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. ெபாதுமக்களின் கோரிக்கையை ஏற்று சாக்கடை கால்வாய் கட்டும் பணி தொடங்கியது. ஆலங்காடு கடைசி வீதி மேடு பகுதியாக உள்ளதால் கழிவுநீர் செல்ல ஏதுவாக தனியார் இடத்தின் வழியாக குழாய் அமைத்து அதன் மூலமாக கழிவுநீரை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கான பணிகளும் நேற்று பொக்லைன் எந்திரம் மூலமாக தொடங்கியது.
அப்போது குழாய் அமைக்கும் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணத்தில் இடத்தின் உரிமையாளர் சிலர் வாகனங்களை சாலையின் நடுவே குறுக்கே நிறுத்தினர். இதனால் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 54-வது வார்டு கவுன்சிலரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொறுப்பாளருமான அருணாச்சலம் தலைமையில் அப்பகுதியில் முற்றுகையிட்டு தனியார் இடத்துக்கு சொந்தமான நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பரபரப்பு
குழாய் அமைக்க இடையூறு ஏற்படுத்தியவர்களின் வாகனங்கள் அங்கிருந்து செல்ல முடியாத அளவுக்கு பொதுமக்களும் தங்கள் வாகனங்களை சாலை நடுவே நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. உரிமையாளரிடம் விரைவாக வாகனங்களை எடுத்து பணி செய்ய விட வேண்டும் என்றும், இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து வாகனங்களை எடுத்த பிறகு மீண்டும் பணி தொடங்கியது.