கல்வராயன்மலையில் சாலை வசதி இல்லாததால் அல்லல்படும் மலைவாழ் மக்கள்


கல்வராயன்மலையில்  சாலை வசதி இல்லாததால் அல்லல்படும் மலைவாழ் மக்கள்
x
தினத்தந்தி 12 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் அல்லல்படுகின்றனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி ஆகிய 4 மாவட்ட எல்லையில் இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த வனப்பகுதியாக கல்வராயன்மலை உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு விவசாயம் பிரதான தொழிலாகும்.

அடிப்படை வசதிகள்

இங்குள்ள மலை கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சாலை வசதி இல்லாததால், தங்கள் கிராமங்களில் இருந்து ஒத்தையடி பாதை வழியாக கால் கடுக்க நடந்து போக்குவரத்து வசதியுள்ள வெள்ளிமலை, கரியாலூர், சேராப்பட்டு போன்ற பகுதிகளுக்கு வந்து பின்னர் அங்கிருந்து கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம் போன்ற நகர்புறங்களுக்கு பெரும் சிரமங்களுக்கு இடையே சென்று வருகிறார்கள்.

அடர்ந்த வனப்பகுதிக்குட்பட்ட பெரும்பாலான மலை கிராமங்களில் குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் அக்கிராமங்களில் வசிக்கும் பெண்கள் காலி குடங்களுடன் குடிநீரை தேடி வனப்பகுதியில் உள்ள கிணறுகளுக்கு கால் கடுக்க நடந்து சென்று தலையில் சுமந்து குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் மின்சார வசதி இல்லாததால் இரவு நேரங்களில் மண்எண்ணெய் விளக்குகளை எரிய வைத்து அந்த வெளிச்சத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமப்பட்டு படித்து வருகின்றனர்.

இதுதவிர இங்கு வசிக்கும் முதியவர்கள், கர்ப்பிணிகள், தாய்மார்கள் சாலை வசதி இல்லாததால் சிகிச்சைக்காக நகர்புறங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சென்று வர மிகவும் சிரமப்பட்டு வரும் நிலை உள்ளது. மலை கிராமங்களில் ஊரக வளர்ச்சித்துறை நிதி ஒதுக்கி சாலை அமைக்க முயன்றால் வனத்துறையினர் அதை தடுத்து நிறுத்தி விடுகிறார்கள். இது போன்ற சில காரணங்களால் கல்வராயன்மலை கிராமங்கள் அனைத்தும் இன்னமும் அடிப்படை வசதிகள் இன்றியே காணப்படுகிறது.

ஏமாற்றம்

ஏழைகளின் சுற்றுலா தலமான கல்வராயன்மலையில் பெரியார், கவியம், மேகம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகளும், ஏராளமான ஓடைகளும் உள்ளன. பெரும்பாலான நீர் வீழ்ச்சிகளுக்கு சென்று வர போதிய சாலை வசதி இல்லாததால் சுற்றுலா வரும் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். இதனால் மலைவாழ் கிராமங்கள் மட்டுமின்றி சுற்றுலா தலங்களும் வளர்ச்சி அடையாமல் உள்ளன.

எனவே கல்வராயன்மலையில் உள்ள மலைவாழ் கிராமங்களுக்கு குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு, கல்வராயன்மலை சுற்றுலா தலத்தை மேம்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இங்கு வசிக்கும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

வளர்ச்சி பெறவில்லை

இதுகுறித்து கல்வராயன்மலை ஆராம்பூண்டி விஜயகாந்த் கூறுகையில், கல்வராயன்மலையையொட்டி தான் ஏற்காடு மலை உள்ளது. இங்கு சாலை, போக்குவரத்து, தங்கும் விடுதி போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காடு மலைக்கு வந்து செல்கிறார்கள். ஆனால் கல்வராயன்மலையில் உள்ள நீர்வீழ்ச்சிகளுக்கு சென்று வர சாலை, தங்கும் இடம் போன்ற வசதிகள் இல்லாததால் கல்வராயன்மலை சுற்றுலா வளர்ச்சி பெறவில்லை. மாவட்ட நிர்வாகம் சாலை வசதி செய்து தர முன்வந்தாலும் வனத்துறை அதிகாரிகளின் கெடுபிடியால் சாலை பணி நடைபெறுவதில்லை. எனவே கல்வராயன்மலையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நலன்கருதி சாலை வசதி செய்து தருவதோடு, சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கரடு, முரடான பாதை

வாரம் கிராமத்தை சேர்ந்த இன்பராஜ்:- நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. இன்னமும் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டுதான் கல்வராயன்மலையில் உள்ள மலைவாழ்கிராமங்கள். இங்குள்ள ஆரம்பூண்டி, வாரம் உள்ளிட்ட பல கிராமங்கள் சேலம் மாவட்டத்தை ஒட்டி இருந்தாலும் போதிய சாலை வசதி இல்லாததால் கரடு முரடான பாதையையே பயன்படுத்தி வர வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் உடல்நலம் சரியில்லாதவர்களை கட்டிலில் தூக்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எதிர்பாராதவிதமாக விபத்துகள் நிகழ்ந்தால் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் ஆகியவை வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவதோடு, கரியாலூரில் சேதமடைந்து கிடக்கும் படகுகுழாம், தொங்கு பாலம், சிறுவர் பூங்கா போன்றவற்றை அரசு சீரமைத்து ஆண்டு தோறும் நடத்தப்படும் கோடை விழாவை சிறப்பாக நடத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


Next Story