கல்யாணதீர்த்த கோடிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் கல்யாணதீர்த்த கோடிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் கல்யாணதீர்த்த கோடிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அகஸ்தியர் அருவி
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவி உள்ளது. இந்த அருவிக்கு மேல் இருக்கும் கல்யாணதீர்த்தத்தில் லோகநாயகி சமேத கோடிலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மேலும் அகஸ்தியர், அவரது மனைவி லோபமுத்ராவுடன் ரதத்தில் நின்ற நிலையில் சிலை அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு சிவபெருமான் திருமண கோலத்தில் அகஸ்தியருக்கு பிரத்யேகமாக காட்சியளித்தார்.
இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது அகஸ்தியர் மற்றும் லோபமுத்ரா சிலைகள் அடித்துச் செல்லப்பட்டு கோவில் சேதமானது.
பக்தர்கள் கோரிக்கை
இதைத்தொடர்ந்து புதிதாக அகஸ்தியர் - லோபமுத்ரா சிலையை நிறுவ பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இங்கு ஆய்வு செய்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, விரைவில் சிலைகள் நிறுவப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
அமெரிக்காவில் பணிபுரியும் சென்னையை சேர்ந்த ஒருவர் தனது சொந்த முயற்சியால் பல லட்சம் செலவில் அறநிலையத்துறை அனுமதியுடன் கல்யாணதீர்த்தத்தில் அகஸ்தியர், லோபமுத்ரா சிலையை நிறுவும் முயற்சியை எடுத்தார். தொடர்ந்து கோவில் முற்றிலும் சீரமைக்கப்பட்டு புதுமண்டபம் கலைநயத்துடன் கட்டப்பட்டது. இதன்பின்னர் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
நேற்று முன்தினம் காலையில் விக்னேஷ்வர பூஜை, மகாகணபதி ஹோமம், பிரம்மச்சாரி பூஜை, நவக்கிரக ஹோமம், தனபூஜை, கோ பூஜை, சுமங்கலி பூஜை, கன்னியா பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. மாலையில் விசேஷ சந்தி, கும்ப அலங்காரம், முதற்கால யாகபூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.
நேற்று காலை இரண்டாம் கால யாகபூஜை, பிம்பசுத்தி, நாடிசந்தானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து மூலஸ்தானம் லோகநாயகி சமேத கோடிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் அகஸ்தியர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திரளான பக்தர்கள்
இதில் அறநிலையத்துறை துணை ஆணையர் ஜான்சிராணி, உதவி ஆணையாளர் கவிதா, சரக ஆய்வர் கோமதி, செயல் அலுவலர் போத்திச்செல்வி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஸ், அம்பை ஒன்றிய தலைவர் பரணி சேகர், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள், மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்தின்போது கருடர் வானத்தில் வட்டமிட்டது பக்தர்களை பரவசமடைய செய்தது.
விழாவையொட்டி அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சிவகுரு மாதாந்திர பவுர்ணமி, அமாவாசை குழுவினர் சார்பில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. அம்பை சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.