காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


தினத்தந்தி 26 July 2023 12:30 AM IST (Updated: 26 July 2023 5:20 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அருகே காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிவகங்கை

சிங்கம்புணரி அருகே காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவில்

சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டியில் பிரசித்தி பெற்ற காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நேற்று காலை கோவில் மூலவர் சன்னதிக்கு முன்பு பிரசன்ன குமார் குருக்கள் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் புனித நீர் அடங்கிய கும்பங்களை வைத்து சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கோவில் குருக்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து விநாயகர், முருகன், மூலவர் காமாட்சி பரமேஸ்வரி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பகல் 12 மணி அளவில் கோவில் முன்பு உள்ள கொடி மரத்திற்கு கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பால்குடம் எடுத்தல்

அதனை தொடர்ந்து நேர்த்திக்கடன் இருக்கும் பக்தர்கள் காப்பு கட்டி கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகின்ற 29-ந்தேதி அம்மன் ஊஞ்சல் தரிசனமும்,, 1-ந்தேதி பால்குடம் எடுத்தல் மற்றும் பூத்தட்டு எடுத்து வரும் நிகழ்ச்சியும், 2-ந்தேதி திருவிளக்கு பூஜை மற்றும் முளைப்பாரி எடுத்தல் விழாவும், 3-ந்தேதி முளைப்பாரி கரைத்தல், அன்னதானம் வழங்குதல் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை வேட்டையன்பட்டி விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் மற்றும் வேட்டையன்பட்டி, சிங்கம்புணரி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


Next Story