செஞ்சிக்கோட்டைகமலக்கண்ணி அம்மன் கோவில் தேரோட்டம்ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
செஞ்சிக்கோட்டையில் உள்ள கமலக்கண்ணி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
செஞ்சி,
செஞ்சிக்கோட்டை மலை மீது கமலக்கண்ணி அம்மன், ராஜகாளியம்மன், மகமாரியம்மன், கோட்டை வீரப்பன் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு 10 நாள் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், தினசரி சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, வீதிஉலா நடந்தது. விழாவின் சிகர திருவிழாவான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் பால் அபிஷேகம் நடந்து, மதியம் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு ராஜகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பூங்கரகம் எடுத்துவரப்பட்டது. வரும் வழியில் கோட்டையினுள் எருமை மாடு பலி கொடுக்கப்பட்டு எருமை மாட்டு தலை செஞ்சி தேர் புறப்படும் இடமான மந்த வெளிக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் கமலக்கண்ணி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் பீரங்கி மேடு, திருவண்ணாமலை சாலை, விழுப்புரம் சாலை, சத்திர தெரு வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. செஞ்சி துணைபோலீஸ் சூப்பிரண்டு கவினா மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர் திருவிழா நிகழ்ச்சிகளை கோவில் அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் உபயதாரர்கள் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.