பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்திய கார் கிருஷ்ணகிரியில் புதுப்பிப்புபொதுமக்கள் செல்பி எடுத்து ஆர்வம்


பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்திய கார் கிருஷ்ணகிரியில் புதுப்பிப்புபொதுமக்கள் செல்பி எடுத்து ஆர்வம்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்திய கார், கிருஷ்ணகிரியில் புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்தனர்.

காமராஜர் பயன்படுத்திய கார்

பெருந்தலைவர் காமராஜர் எம்.டி.டி.2727 என்ற எண் கொண்ட 1952-ல் அறிமுகப்படுத்தப்பட்ட செவர்லட் கருப்பு நிற காரை பயன்படுத்தி வந்தார். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த போது காமராஜர் பயன்படுத்தி வந்த இந்த காரை முதல்-அமைச்சர் ஆன பிறகும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்.

காமராஜர் மறைவுக்கு பிறகு சென்னை காமராஜர் அரங்கில் இந்த கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள மெக்கானிக் ஷெட்டிற்கு கடந்த மாதம் கொண்டு வரப்பட்ட இந்த கார் தற்போது புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து கார் ஷெட்டின் உரிமையாளர் அஸ்வின் ராஜ்வர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுப்பொலிவு

எனது தாத்தா முனுசாமி கவுண்டர் காமராஜர் காலத்தில் கிருஷ்ணகிரியில் எம்.எல்.ஏ. வாக இருந்தார். என் தந்தை ராஜேந்திர வர்மா தனியார் பஸ்கள் வைத்து தொழில் நடத்துகிறார். நான் கிருஷ்ணகிரியில் கார்ஷெட் வைத்துள்ளேன். நாங்கள் பாரம்பரியமாக காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி காமராஜர் பயன்படுத்திய காரை புதுப்பித்து தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி கடந்த, ஜூன் மாதம் 1-ந் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் இருந்து காரை எடுத்து வந்து கிருஷ்ணகிரியில் புதுப்பொலிவுடன் தயார் செய்துள்ளோம்.

சென்னைக்கு அனுப்பப்படுகிறது

காருக்கான கண்ணாடி, ரப்பர் உதிரி பாகங்கள், லைட்டுகள் ஆகியவற்றை அமெரிக்காவில் இருந்து ஆர்டர் செய்து வரவழைத்தோம். மேலும் சில்வர் பாகங்களை ஜோத்பூர் அரண்மனையில் பழைய கார்களை புனரமைக்கும் நிபுணர் அர்ஜூன் தலைமையிலான குழுவினரால் புதுப்பித்தோம்.

தற்போது புதுப்பொலிவுடன் உள்ள காரை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்பி எடுத்து செல்கிறார்கள். வருகிற 15-ந் தேதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் அரங்கத்திற்கு இந்த கார் திரும்ப அனுப்பப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story