கம்பம் வாரச்சந்தை நாளை முதல் தற்காலிக இடத்தில் செயல்படும்: நகராட்சி தலைவர் தகவல்
கம்பம் வாரச்சந்தை நாளை முதல் தற்காலிக இடத்தில் செயல்படும் என்று நகராட்சி தலைவர் கூறினார்.
கம்பம் நகராட்சி வாரச்சந்தையில் கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 1-ந்தேதி முதல் வருகிற நவம்பர் மாதம் 30-ந்தேதி வரை சந்தை செயல்படாது என்று நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் கம்பம் வாரச்சந்தையில் உள்ள பலசரக்கு மற்றும் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர், ஓணம் பண்டிகை உள்ளிட்ட விழாக்கள் வருவதால் வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க தற்காலிக இடத்தில் சந்தை தொடங்க ஏற்பாடு செய்யுமாறு நகராட்சி மன்ற தலைவர் வனிதா நெப்போலியனிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து ஆணையாளர் பாலமுருகன் பொறியாளர் பன்னீர், உதவி பொறியாளர் சந்தோஷ்குமார் ஆகியோருடன் நகராட்சி தலைவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் வாரச்சந்தை அருகே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் சந்தை செயல்படலாம் என்றும், நகராட்சியால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வரி இனங்களை செலுத்த வேண்டும் என்றும் கூறினார். மேலும் கட்டுமான பணிகளுக்கு இடையூறு அளிக்க கூடாது என்றார்.