கம்பனின் படைப்புகள் உலகில் தத்துவங்களை மிஞ்சும் வகையில் உள்ளது


கம்பனின் படைப்புகள் உலகில் தத்துவங்களை மிஞ்சும் வகையில் உள்ளது
x

கம்பனின் படைப்புகள் உலகில் தத்துவங்களை மிஞ்சும் வகையில் உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி அரங்க மகாதேவன் பேசினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் 48-வது ஆண்டு கம்பன் கழக பெருவிழா நேற்று மாலை புதுக்கோட்டை நகர்மன்ற கூடத்தில் தொடங்கியது. கம்பன் கழக பொருளாளர் கோவிந்தராஜன் மலர் வணக்கம் பாடினார். கம்பன்கழக தலைவர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்து நினைவு பரிசுகளை வழங்கினார். அமெரிக்க ஜனநாயக கட்சியின் பொறுப்பாட்சியர் டாக்டர் ராஜன் நடராஜன் தலைமை தாங்கினார். புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, மதுரை கம்பன் கழக தலைவர் சங்கரசீத்தாராம், ராமேசுவரம் முரளிதரன், கள்ளிப்பட்டி காகுத்து கார்த்திகேயன், திருச்சி ரவீந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் ராஜ்மோகன், புதுக்கோட்டை திருக்கோவில்கள் செயல் அலுவலர் முத்துராமன், தமிழ்வளர்ச்சித்துறை இயக்குனர் சபீர்பானு ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து இலங்கை ஜெயராஜ் தலைமையில் கம்பன் யார் என்ற சுழலும் சொல்லரங்கம் நடந்தது. முன்னதாக துணைத்தலைவர் முருகப்பன் வரவேற்றார். முடிவில் பேராசிரியர் முருகையன் நன்றி கூறினார்.

தொடர்ந்து கம்பன் கழக பெருவிழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திண்டுக்கல் அம்சவேணி தயாரித்து, புதுச்சேரி ரவி குணவதி மைந்தன் எழுத்து இயக்கத்தில் தயாரான கசிச்சக்கரவர்த்தி கம்பர் திரைப்படம் திரையிடப்பட்டது. அதை தொடர்ந்து பல்பணி அரங்கம் நடைபெற்றது. இதில் இலக்கிய மாமணி விருது பெற்ற புதுகை தென்றல் ஆசிரியர் தர்மராஜன், கம்பன் பணிவள்ளல் விருது பெற்ற ஸ்ரீ புவனேஸ்வரி தங்கமாளிகை உரிமையாளர் சோம.நடராஜன் மற்றும் முத்து மீனாட்சி மருத்துவமனை டாக்டர்.பெரியசாமி ஆகியோருக்கு விருதுகளை வழங்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் தலைமை தாங்கி பேசுகையில், கம்பனின் படைப்புகள் உலகில் தத்துவங்களை மிஞ்சும் வகையில் இருந்து வருகிறது. உலகில் உன்னதமான படைப்பாக கம்பராமாயணம் இருந்து வருகிறது. இயல், இசை, நாடகம், மானிடம் வாழ்க்கை முறை என பலவற்றை உணர்த்தியுள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழி காப்பியங்கள் வாழ்வியலை உலகிற்கு காட்டியது. கம்பனின் படைப்புகள் தமிழில் தனித்தன்மையுடன் இருந்து வருகிறது. வாழ்வில் நல்லதை செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக கம்பனின் காவியங்கள் உயர்த்தியுள்ளது, என்றனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலை வகித்து பேசுகையில், கம்பனின் எழுத்துகள் புதிய பரிமானத்தை தந்து கொண்டிருக்கிறது. கம்பனின் ஆரன்ய காண்டத்தை படித்த போது புதிய வினாக்கள் தோன்றுகிறது. காவியங்கள் அனைத்தும் இன்று வரை படித்து கொண்டே இருக்கலாம் என்றார். அதை தொடர்ந்து உள்ளத்தனையது உயர்வு என்ற பொருளில் இலங்கை ஜெயராஜ் பேசினார்.


Next Story