கமுதி புனித அந்தோணியார் ஆலய திருவிழா-கொடியேற்றத்துடன் தொடங்கியது
கமுதி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம்
கமுதி-மெயின் பஜாரில், உள்ள புனித அந்தோணியார் ஆலயம் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆலயமாகும். பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தின் தேர்பவனி திருவிழா ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அது போல், இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு நேற்று காலை அந்தோணியார் உருவம் பொறித்த கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பின்பு ஆலயத்தின் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சி பங்குத்தந்தை அருள்சந்தியாகு மற்றும் அருட்தந்தையர்கள் முன்னிலையில், பரத உறவின் முறையினர் கொடியை ஏற்றினர். இதில் 300-க்கும் மேற்பட்ட கிறிஸ் தவ மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தேர் பவனி
வரும் 16-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை திருவிழா திருப்பலி நடைபெற்று மாலையில், புனித அந்தோணியார், புனித ஜெபஸ்தியார், புனித சவேரியார், புனித மிக்கேல் சம்மனசு ஆண்டவர் போன்ற புனிதர்களின் தேர்பவனி ஆலயத்திலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயம் வந்தடையும்.
வாணவேடிக்கை, பேண்டு வாத்தியம் மற்றும் மேளதாளங்களுடன் நடைபெறும் இவ்விழாவில் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வர். 17-ந் தேதி சனிக்கிழமை, கிறிஸ்தவ தெருக்களில் மட்டும் இந்த தேர்ப்பவனி நடைபெறும். 18-ந் தேதி ஞாயிற்றுக் கிழமை கர்த்தர் நாதர் சுவாமி நினைவுத் திருப்பலி அசனம் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு, ஆலயம் மற்றும் கிறிஸ்தவ தெருக்கள் முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது. விழா ஏற்பாடுகளை பரத உறவின்முறையார் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.