கண்டமனூர் பரமசிவன் கோவில் கண்மாயில்களைகட்டிய மீன்பிடி திருவிழா
கண்டமனூர் பரமசிவன் கோவில் கண்மாயில் மீன்பிடி திருவிழா களைகட்டியது.
மீன்பிடி திருவிழா
கண்டமனூர் கிராமத்தில் பரமசிவன் கோவில் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் நீர்வரத்து குறையும்போது மீன்படி திருவிழா நடத்தப்படும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கண்டமனூர் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கண்மாயில் முழு கொள்ளளவில் நீர் தேங்கி காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக போதிய அளவில் மழை பெய்யாததால் கண்மாயில் தொடர்ந்து நீர் குறைந்து கொண்டே வந்தது.
இதையடுத்து கண்டமனூர் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காலை கண்மாயில் மீன்படி திருவிழா நடந்தது. இதையொட்டி மீன் பிடிப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரமசிவன் கோவில் கண்மாய்க்கு வந்தனர். அங்குசாமி, அய்யனார் உள்ளிட்ட கிராம முக்கியஸ்தர்கள் சாமி வழிபாடு செய்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
கட்லா, ரோகு ரக மீன்கள்
இதையடுத்து மீன்படி திருவிழா களைகட்ட தொடங்கியது. பின்னர் கண்மாய்க்குள் இறங்கிய பொதுமக்கள் வலை, கச்சா உள்ளிட்டவற்றை பயன்படுத்தி போட்டி போட்டு கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, ரோகு, ஜிலேபி உள்ளிட்ட பலவகையான மீன்கள் சிக்கின. அதிக அளவில் மீன்களை பிடித்தவர்கள் கிடைக்காதவர்களுக்கு தங்களது மீன்களை பகிர்ந்து கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நேற்று மாலை வரை மீன்படி திருவிழா நடந்தது. இதையடுத்து பொதுமக்கள் தாங்கள் பிடித்த மீன்களை வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மீன் குழம்பு வாசனை கமகமவென இருந்தது.