காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணியை முடிக்க வேண்டும்


காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணியை முடிக்க வேண்டும்
x

காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணியை முடிக்க வேண்டும்

திருப்பூர்

தளி

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் முன்பு காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணியை முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காண்டூர் கால்வாய்

பிஏபி திட்டத்தின் உயிர் நாடியாகவும், வனவிலங்குகளின் தாகம் தீர்க்கும் தடாகமாகவும், காண்டூர் கால்வாய் விளங்கிவருகிறது. அப்பர் நீராறு, லோயர் நீராறு, சோலையாறு, ஆனைமலையாறு, பரம்பிகுளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு உள்ளிட்ட தொகுப்பு அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தை அடைகிறது. அதன் பின்னர் காண்டூர் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதி வழியாக 49 கிலோ மீட்டர் தூரம் பயணித்து திருமூர்த்தி அணை வருகின்றது.

ஆண்டுதோறும் ஜூலை மாதம் 15-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு மே மாதம் 15-ந் தேதி வரையிலும் 10 மாதங்கள் தண்ணீர் வரத்து இருக்கும் வகையிலும் காண்டூர் கால்வாய் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த கால்வாயால் பிஏபி பாசனத் திட்டத்தின் கீழ் திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இவற்றில் அம்மாபட்டிகுளம், செங்குளம், பெரியகுளம், ஒட்டுகுளம் உள்ளிட்ட ஏழுகுளங்கள் பாசனமும் அடங்கும். அதுதவிர உடுமலை, கணக்கம்பாளையம், மடத்துக்குளம், கொமரலிங்கம், குடிமங்கலம் மற்றும்பூலாங்கிணர் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருவதற்கு காண்டூர் கால்வாயின் பங்கு முக்கியமானதாகும்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

சீரமைப்பு பணி

திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்தை அளிக்கக்கூடிய ஆதாரங்களில் காண்டூர்கால்வாய் முக்கிய பங்கு வகிக்கிறது. கால்வாய் வனப்பகுதியின் அடிவாரத்தில் கட்டப்பட்டு உள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீரால் அடித்து வரப்படுகின்ற மண், பாறைகள் அதில் விழுவதால் பக்கவாட்டு சுவர்களில் சேதமடைகிறது. இதனால் ஆங்காங்கே கற்களும், பாறைகளும் கால்வாயில் விழுந்த காணப்படுவதுடன் பக்கவாட்டு சுவர்களின் சேதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் கால்வாயில் முழுமையான அளவு தண்ணீர் கொண்டுவர முடியாத சூழல் நிலவுவதால் அணை விரைவில் நிரம்புவதில்லை. அதைத்தொடர்ந்து கால்வாயில் விழுந்துள்ள கற்களை அகற்றி சேதமடைந்த பக்கவாட்டு சுவரையும் சீரமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்பேரில் காண்டூர் கால்வாயில் சீரமைப்பு பணிகள் தொடங்கி கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் முன்பு பணியை விரைந்து முடித்து 2- ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கான ஆயத்த பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story