தொழிலாளர் நினைவு சின்னத்திற்கு கனிமொழி எம்.பி. மரியாதை
தூத்துக்குடியில் மே தினத்தையொட்டி தொழிலாளர் நினைவு சின்னத்துக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடியில் மே தினத்தையொட்டி தொழிலாளர் நினைவு சின்னத்துக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மே தினம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மே தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி வடக்கு மாவட்ட கழக அலுவலகமான கலைஞர் அரங்கம் வளாகத்தில் தொழிலாளர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் நேற்று காலையில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு நினைவு சின்னத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் என்.பி. ஜெகன் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் பலர் கலந்து கொண்டனர்.
கிராம சபை
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இன்னும் அதிகமாக கிராமங்களுக்கு சென்று, அவர்களின் கோரிக்கைகளை கேட்டு அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் கிராமசபை கூட்டங்களை அதிகப்படுத்தி உள்ளார். உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தில் அதிக மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்த மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் ஆகும்.
குடிநீர் பிரச்சினை
நீங்கள் இங்கே பல்வேறு கோரிக்கைகளை எடுத்து வைத்துள்ளீர்கள். முக்கியமாக பட்டா வேண்டும் என்ற கோரிக்கை. அது இன்னும் ஒரு மாதத்தில் நிறைவேற்றப்படும்.
குடிநீர் பிரச்சினையை நீக்குவதற்கு ரூ.14 கோடி செலவில் 17 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்கு இணைப்புகள் தரப்பட்டிருக்கிறது. மேலும் ரூ.3.75 கோடி செலவில் தண்ணீர் வழங்குவதற்கு திட்டம் கொண்டுவரப்பட்டு குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும். இங்கே கதர் கிராம துறையின் இடத்தில் விளையாட்டு மைதானம், பூங்கா அமைக்க, துறை சார்ந்த அமைச்சரிடம் பேசி எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும். மருத்துவமனைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ் வசதிகள் செய்து தருவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும்.
உப்பள தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை விரைவில் செய்து தருவதற்கு முயற்சிகள் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர்
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட ஊராட்சித்தலைவர் பிரம்மசக்தி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், உதவி கலெக்டர் கவுரவ்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உலகநாதன், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத்தலைவர் சரவணக்குமார், துணைத்தலைவர் தமிழ்செல்வி மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.