மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை கனிமொழி எம்.பி. ஆய்வு


மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை கனிமொழி எம்.பி. ஆய்வு
x
தினத்தந்தி 23 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார்.

கனிமொழி எம்.பி. ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் நகர உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ரூ.400 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த பனிகளை விரைவுபடுத்தும் வகையில் நேற்று தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட திரவியரத்தினம் நகர், முத்துகிருஷ்ணன்நகர், பால்பாண்டிநகர், 4-ம் கேட், சில்வர்புரம், வி.எம்.எஸ்.நகர், ரஹ்மத்நகர் ஆகிய இடங்களில் கனிமொழி எம்.பி. மற்றும் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதனைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் ஜெயராஜ்நகர் சந்திப்பில் உருவாக்கப்பட்டுள்ள 'ஐ லவ்' தூத்துக்குடி என்ற செல்பி பாயிண்டினை திறந்து வைத்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பேட்டி

பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஒவ்வொரு மழைக்காலங்களிலும் பல இடங்களில் மழை நீர் தேங்கி நின்று பொதுமக்களுக்கு மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே வரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை சுமார் 60 சதவீதம் பணிகள் முடிவடைந்து உள்ளன. எஞ்சியுள்ள பணிகளையும் முடிக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவு பெறாத இடங்களில் தேங்கும் மழை நீரை மின்மோட்டார்கள் மூலம் அகற்றுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

நடவடிக்கை

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை பார்த்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து உள்ளார். இன்னும் சரியான முறையில் விசாரித்து மக்களுக்கு நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கை எடுப்பார்.

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருவது நியாயமான கேள்வி தான். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் விசாரித்து தான் எந்த முடிவையும் எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

அதைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் 2 புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நகர அளவிலான ஆலோசனை மன்ற கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள், வணிகர்கள், பொதுமக்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன், சண்முகையா எம்.எல்.ஏ. மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர்.




Next Story