வான்தீவில் கனிமொழி எம்.பி. ஆய்வு


வான்தீவில் கனிமொழி எம்.பி. ஆய்வு
x
தினத்தந்தி 25 Sept 2022 12:15 AM IST (Updated: 25 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி வான்தீவில் கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி வான்தீவில் கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார்.

கனிமொழி எம்.பி. ஆய்வு

தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள வான்தீவினை நேற்று கனிமொழி எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மன்னார் வளைகுடா இந்தியாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு இயற்கை பொக்கிஷமாகும். இங்கு பவளப்பாறைகள், அலையாத்தி காடுகள், தீவுகள் மற்றும் கழிமுகங்கள் போன்ற முக்கியமான வாழிடங்கள் அமைந்து உள்ளதால் கடல் உயிரிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

இந்த தீவுகள் மன்னார் வளைகுடா கடற்பகுதிக்கு இயற்கை அரணாக விளங்குகின்றன. தீவுகளைச் சுற்றி அமைந்துள்ள பவளப்பாறைகள், தீவுகளை பெரிய அலைகள் தாக்காமலும், கடற்கரையில் மண் அரிப்பு ஏற்படாமலும் பாதுகாக்கின்றன. ஆனால் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் மட்டம் உயர்வாலும் பவளப்பாறைகள் அளவு குறைவதாலும் தீவுகளின் நிலப்பரப்பு கடந்த 40 வருடங்களில் வெகுவாகக் குறைந்துள்ளன.

செயற்கை பவளப்பாறைகள்

வான் தீவு கடந்த 40 வருடங்களில் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. 2015-ம் ஆண்டு இந்த தீவின் அளவு வெறும் 2.3 ஹெக்டேர் அளவு மட்டுமே இருந்தது. வான் தீவை பாதுகாக்கவும், தீவை சார்ந்துள்ள பல்வகையான உயிர்களை பாதுகாக்கவும் தமிழக அரசு முயற்சி எடுத்தது. 2015-ம் ஆண்டு முதல் அரசின் உதவியோடு வான் தீவைச் சுற்றிலும் பல்வேறு நன்மைகளைத் தரும் செயற்கைப் பவளப்பாறைகள் இடப்பட்டன. இந்த செயற்கை பவளப்பாறைகள் தீவை மண் அரிப்பில் இருந்து பாதுகாக்கின்றன.

தற்போது இந்த தீவின் அளவு அதிகரித்து சுமார் 3.75 ஹெக்டேராக உள்ளது. இவ்வாறு அரசின் முயற்சியால் வான் தீவு மூழ்காமல் காக்கப்பட்டு உள்ளது. செயற்கை பவளப்பாறைகளைச் சுற்றிலும் மீன்வளம் வெகுவாக அதிகரித்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் உள்பட பலர் உடன் சென்றனர்.


Next Story