முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கனிமொழி எம்.பி. வாழ்த்து


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கனிமொழி எம்.பி. வாழ்த்து
x

கனிமொழி எம்.பி. தனது பிறந்தநாளையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னை,

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று தனது 55-வது பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கோவையில் நேற்று காலை சந்தித்தார்.

அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழிக்கு சால்வை அணிவித்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, வி.செந்தில் பாலாஜி, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை

அதனைத்தொடர்ந்து சென்னை திரும்பிய அவர், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் மகளிரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் உடன் சென்றனர்.

பின்னர் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சி.ஐ.டி. காலனியில் உள்ள தனது இல்லத்தில் தொண்டர்களை கனிமொழி சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை பெற்றார். 'கேக்' வெட்டி, தொண்டர்களுக்கு வழங்கினார். அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட நிர்வாகிகளும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பிறந்தநாளையொட்டி, சென்னையில் பல இடங்களில் கனிமொழியை வாழ்த்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

கவர்னர் தமிழிசை

தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சக்கரபாணி, செஞ்சி மஸ்தான், எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கதிர் ஆனந்த், கலாநிதி வீராசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்பட ஏராளமானோரும் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.


Next Story