மாற்றுத்திறனாளி மூதாட்டிக்கு உதவிய கனிமொழி எம்.பி.
தூத்துக்குடியில் தேசிய ஊரக வேலைஉறுதி திட்ட பணியில் ஈடுபட்டு இருந்த மாற்றுத்திறனாளி மூதாட்டிக்கு கனிமொழி எம்.பி. உதவிகளை செய்ததுடன், ஆஸ்பத்திரியில் சிகிச்ைச பெற்று வரும் அவரது மகனுக்கும் நிதியுதவி வழங்கியது மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடியில் தேசிய ஊரக வேலைஉறுதி திட்ட பணியில் ஈடுபட்டு இருந்த மாற்றுத்திறனாளி மூதாட்டிக்கு கனிமொழி எம்.பி. உதவிகளை செய்ததுடன், ஆஸ்பத்திரியில் சிகிச்ைச பெற்று வரும் அவரது மகனுக்கும் நிதியுதவி வழங்கியது மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆய்வு
தூத்துக்குடி அருகே உள்ள எப்போதும் வென்றான் பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் ஈடுபட்டு இருந்த பெண்களை தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி நேரில் சந்தித்து பேசினார். அவர்களிடம் ஊதியம் முறையாகவும், குறித்த நேரத்தில் கொடுக்கப்படுகிறதா என்றும், பணியின் நிலைமை குறித்தும் கேட்டறிந்தார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மூதாட்டி லட்சுமி என்பவர் கனிமொழி எம்.பியின் கைகளை பற்றிக் கொண்டு, தனது மகனுக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாகவும், தான் மிகுந்த வறுமையில் இருப்பதாகவும் கண்ணீர் மல்க செய்கை மூலம் தெரிவித்தார். உடனடியாக கனிமொழி எம்.பி. மூதாட்டிக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.
சிகிச்சை
இதனை தொடர்ந்து நேரடியாக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி லட்சுமியின் மகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் நல்லமுறையில் சிகிச்சை அளிக்க டாக்டர்களை அறிவுறுத்தினார். பின்னர் அவருக்கும் நிதி உதவி வழங்கினார். இந்த சம்பவங்களை நேரில் பார்த்த பொதுமக்கள் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தனர்.
அப்போது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.