அடிப்படை வசதியின்றி அல்லல்படும் பொதுமக்கள்


அடிப்படை வசதியின்றி அல்லல்படும் பொதுமக்கள்
x
திருப்பூர்


கணியாம்பூண்டி ஊராட்சி பகுதியில் அடிப்படை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். தெருக்களில் ஆறாக பாயும் கழிவுநீரால் நடமாட முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.

தொழில்நகரம்

டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் தொழில்நகரமான திருப்பூரை அதை சுற்றி உள்ள பகுதிகள் வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் மாநகரை சுற்றி உள்ள பகுதிகளுக்கும் விரிவடைந்து வருகிறது. அவினாசியை அடுத்த கணியாம்பூண்டி ஊராட்சியில் மக்கள் தொகை 10 ஆயிரத்தை கடந்து விட்டது. இந்த பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு ரூ.1 லட்சமாக இருந்த ஒரு சென்ட் வீட்டுமனை விலை தற்போது ரூ.8 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த ஊராட்சியில் மகாலட்சுமி அவென்யூ, சுரபி கார்டன், ரோட்டரி அவென்யூ, கார்த்திக் அவென்யூ, ரோஸ் அவென்யூ, ஜெயப்பிரியா கார்டன் என ஏராளமான புதிய குடியிருப்புகளும், வணிக நிறுவனங்களும் உருவாகி உள்ளன. ஆனால் மக்கள் தொகைக்கேற்ப சாக்கடை கால்வாய், தார்சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

ஏ.டி. காலனி, சி.எஸ்.ஐ. காலனி பகுதிகளை தவிர பெரும்பாலான பகுதிகளில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. வீடுகளில் கழிவுநீர் போக்குக்குழி அமைக்கப்படாததால் குடியிருப்பு பகுதிகளில் சாலையில் கழிவுநீர் பாய்கிறது. இதனால் கணியாம்பூண்டியில் இருந்து சோளிபாளையம் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பின்னர் அங்கிருந்து குழாய் மூலமாக கழிவுநீர் எடுத்துச் செல்லப்பட்டு காவிலிபாளையம் ரோட்டில் உள்ள புறம்போக்கு இடத்தில் உள்ள குட்டையில் தேங்கி நிற்கிறது. அந்த கால்வாய் நிரம்பி கழிவுநீர் சாலையில் பாய்ந்து வருகிறது.

சுகாதார சீர்கேடு

இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. இதேபோல் குப்பைகளை வீடுகளில் இருந்து சேகரித்து தரம் பிரிக்கும் திட்டத்தை அமல்படுத்தாததால் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. மேலும் புதிதாக உருவான ஒருசில குடியிருப்புகளில் தார்சாலை வசதியும் செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கட்டிட அனுமதி பெறாமல் சில கட்டிடங்கள் கட்டப்படுகிறது என்ற ஒரு புகாரும் எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

எஸ்.பிலோமினா ( கார்த்திக் அவென்யூ, கணியாம்பூண்டி):

கணியாம்பூண்டி ஊராட்சியை பொறுத்தவரை பெரும்பாலும் நடுத்தர மற்றும் வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்களே அதிகளவில் வசித்து வருகின்றனர். இங்கு பாதாள சாக்கடை வசதியோ, சாக்கடை கால்வாய் வசதியோ நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் வீடுகளில் கழிவுநீர் போக்குக்குழி மூலமாக தான் கழிவுநீரை நிலத்திற்கடியில் இறக்கி வருகின்றனர். இந்த கழிவுநீர் விரைவில் நிரம்பி விடுவதால் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து கழிவுநீர் போக்குக்குழியை புதுபிக்க வேண்டியதாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், கணியாம்பூண்டி ஊராட்சியும் விரைவில் சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும்.

ஞானபிரகாசம் ( கணியாம்பூண்டி):-

இந்த பகுதியில் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் அதிகப்படியான மக்கள் பிற இடங்களிலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ளனர். இந்த ஊராட்சியில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து கழிவுநீரை எடுத்து செல்ல வஞ்சிபாளையம் ரோடு வரை சாக்கடை கால்வாய் அமைத்தால்போதும். அங்கிருந்து நொய்யல் வரை கொண்டு செல்ல சில வழித்தடங்கள் உள்ளன. எனவே அரசு இதை பரிசீலனை செய்து நிரந்தர தீர்வு காண வேண்டும்.

குப்பை பிரச்சினைஅடிப்படை வசதியின்றி அல்லல்படும் பொதுமக்கள்அடிப்படை வசதியின்றி அல்லல்படும் பொதுமக்கள்

கே.ஈஸ்வரன்(மகாலட்சுமி அவென்யூ, கணியாம்பூண்டி):-

அங்கீகாரம் பெற்ற குடியிருப்பாக இருந்தாலும் சாக்கடை கால்வாய் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. தார்சாலை தரமாக இல்லை. குப்பையை வீடுகளுக்கு வந்து தரம் பிரித்து வாங்கிச் செல்லும் திட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே குப்பை வண்டி வருவதால் பொது இடங்களில் குப்பை தேங்கும் நிலை உள்ளது. குடிநீர் பிரச்சினை என்பது கணியாம்பூண்டி ஊராட்சியில் இல்லை. அப்படி செய்து விட்டால் கணியாம்பூண்டி சொர்க்க பூமியாக மாறி விடும்.

கணியாம்பூண்டி ஊராட்சி செயலாளர் மகேஷ்குமார் கூறியதாவது:-

கணியாம்பூண்டி ஊராட்சியில் சாக்கடை கால்வாய் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக எம்.பி.க்கள் ஆர்.ராசா, கே.சுப்பராயன் ஆகியோரை ஊராட்சி தலைவர் உள்பட அனைவரும் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். கட்டிட அனுமதியை பொறுத்த வரை வணிக நிறுவனங்களுக்கு 4 ஆயிரம் சதுர அடி மற்றும் வீடுகளுக்கு 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கட்டிடங்களுக்கு ஊராட்சி அனுமதி வழங்கி வருகிறது. அதற்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு உள்ளூர் திட்ட குழும அனுமதி பெற வலியுறுத்துகிறோம். மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து முறையாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குகிறோம். குப்பையை வீடுகளில் இருந்து தரம் பிரித்து வாங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story